கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் அந்த விளையாட்டை மையப்படுத்தி பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆண்டி பிளவர்,
விக்கெட் கீப்பர் மேட் பிரையர், மூத்த பந்து வீச்சாளர்கள் ஆகியோர் சகவீரர்களை மோசமாக திட்டியதாகவும், வீரர்களின் அறையில் எப்போதும் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவியதாகவும். வீரர்களை திட்டி அச்சுறுத்தும் புதிய கலாச்சாரத்தை ஆண்டி பிளவர் புகுத்தியதாகவும் பீட்டர்சன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இருநாடுகளுக்கு இடையிலான ஆயுதம் ஏந்தாத போராக அந்நாட்டு தீவிர கிரிக்கெட் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இதில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 0-5 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது.
இதனால் இங்கிலாந்து அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பீட்டர்சன் அணியில் இருந்து நீக்கப்பட இந்த தொடர் தோல்வியும் ஒரு காரணமாக இருந்தது. இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக 294 ரன்கள் குவித்த வீரர் பீட்டர்சன்தான்.
இந்நிலையில் பிரிட்டனில் இருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் இங்கிலாந்து அணியின் அப்போதைய பயிற்சியாளர் ஆண்டி பிளவர், விக்கெட் கீப்பர் மேட் பிரையர் ஆகியோரை பீட்டர்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பது:
விக்கெட் கீப்பர் மேட் பிரையர் அணியில் தனக்குள்ள செல்வாக்கை தவறான முறையில் பயன்படுத்தினார். கேட்ச்சை தவறவிட்ட சக வீரர்களை பிரையர்,மூத்த பந்து வீச்சாளர்கள் கடுமையான வார்த்தையில் திட்டுவார்கள். இந்த விஷயத்தில் பயிற்சியாளர் பிளவரின் செயல்பாடும் மோசமாக இருந்தது. அவர் வீரர்களை ஒரு அச்சுறுத்தலான சூழ்நிலையிலேயே வைத்திருந்தார்.
வீரர்கள் அறையில் மோசமான சூழ்நிலையே நிலவி வந்தது. நான் மட்டுமே அவர்களது செயல்பாடுகள் தவறானது என்று நேரடியாக எதிர்ப்புத் தெரிவித்து வந்தேன். இதன் காரணமாகவே என்னை அணியில் இருந்து ஓரம் கட்டினர். பிளவர் ஒரு சிறப்பான அணியை உருவாக்க விரும்பவில்லை. தனக்கான ஒரு ராஜாங்கத்தை உருவாக்க விரும்பினார். எவ்வளவு அதிகம் அராஜகம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்துவிட்டார். இதனால் அணி மோசமான தோல்விகளை சந்தித்தது.
வீரர்கள் அச்சுறுத்துவதால் அவர்களை சிறப்பாக விளையாட வைக்க முடியாது. மாறாக அவர்கள் திறமை குறைந்துவிடும் என்று பலமுறை பயிற்சியாளரிடம் சுட்டிக் காட்டினேன். இதனாலேயே அவருக்கு என் மீது விரோதம் ஏற்பட்டது.
கேட்ச்சை தவறவிட்ட வீரரை திட்டுவதுடன் அவர்களை மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தினர். இதனால் வீரர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மன்னிப்பு கேட்கக் கூறிய விக்கெட் கீப்பரும், பந்து வீச்சாளர்களும் கேட்சை இதுவரை தவற விட்டதே இல்லையா?, வைட் பால் வீசியதே இல்லையா? என்ற கேள்விதான் எனக்குள் எழுந்தது.
அணியை தோல்வியில் இருந்து மீட்டு வர என்ன செய்வது என்பதை யோசிக்காமல் அணியில் அதிகாரம் செலுத்தும் இடத்தை தக்கவைப்பதே முக்கிய வேலையாக இருந்தது. இதனால் தொடர்ந்து 5 டெஸ்ட்களிலும் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. அந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்தபோதும் நான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். அதற்கு காரணம் என்ன என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை என்று கெவின் பீட்டர்சன் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் பிறந்தவரான கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8181 ரன்களை குவித்துள்ளார். இதில் 23 சதங்களும், 35 அரை சதங்களும் அடங்கும். அவர் விரையில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட இருக்கிறார். இதில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தொடர்பாக மேலும் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் இடம் பெற்றிருக்கும் என்று தெரிகிறது.