விளையாட்டு

200 விக்கெட்களை வீழ்த்தி அஸ்வின் சாதனை: வெற்றியை நெருங்குகிறது இந்திய அணி

செய்திப்பிரிவு

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் 200-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இப்போட்டியின் 2-வது இன்னிங்ஸில் நியூஸிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து தடுமாறி வருவதால் இந்திய அணி வெற்றியை நெருங்குகிறது.

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 318 ரன்களையும், நியூஸிலாந்து 262 ரன்களையும் எடுத்தது. இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர இறுதியில் 1 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்திருந்தது. முரளி விஜய் 64 ரன்களுடனும், புஜாரா 50 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி 185 ரன்களைச் சேர்த்த நிலையில் முரளி விஜய்யின் விக்கெட்டை இழந்தது. 170 பந்துகளை சந்தித்த முரளி விஜய் 76 ரன்களை எடுத்திருந்த நிலையில் சாண்ட்னரின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 18 ரன்களிலும், புஜாரா 78 ரன்களிலும், ரஹானே 40 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.

இதைத்தொடர்ந்து ரோஹித் சர்மாவும், ரவீந்திர ஜடேஜாவும் ஜோடி சேர்ந்து ஆடினர். இந்திய அணி விரைவில் ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்து நியூஸிலாந்து அணியை பேட்டிங் செய்யவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவர்கள் வேகமாக அடித்து ஆடினர்.

ரோஹித் சர்மா 93 பந்துகளில் 68 ரன்களையும், ஜடேஜா 58 பந்து களில் 50 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா வின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 107.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப் புக்கு 377 ரன்களை எடுத்திருந்த நிலையில் இந்திய அணி ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார்.

வெற்றிபெற 434 ரன்களை எடுக்க வேண்டும் என்ற கடினமான இலக் குடன் ஆடவந்த நியூஸிலாந்து அணி 2 ரன்களை மட்டுமே எடுத் திருந்த நிலையில் தொடக்க ஆட்டக் காரர்களான குப்தில் (0), லதாம் (2 ரன்கள்) ஆகியோரின் விக்கெட் களை அஸ்வின் சாய்த்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்பே நியூஸிலாந்து கேப்டன் வில்லியம் சனின் (25 ரன்கள்) விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்தினார்.

டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் வீழ்த்திய 200-வது விக்கெட்டாகும் இது. இதன் மூலம் மிகக் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் (37 டெஸ்ட் போட்டிகள்) 200 விக்கெட்களை கைப்பற்றிய 2-வது வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான கிளாரி கிம்மெட் 36 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்களை வீழ்த்தி இந்த பட்டியலில் முதல் இடத் தில் உள்ளார். அவரை சக வீரர்களும், பார்வையாளர்களும் பாராட்டினர். 200 விக்கெட்களைக் கைப்பற்றும் 9-வது இந்திய வீரர் அஸ்வின் என்பது குறிப்பிடத் தக்கது.

வில்லியம்சனைத் தொடர்ந்து 17 ரன்களில் டெய்லர் ரன் அவுட் ஆக 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் என்று நியூஸிலாந்து தடுமாறியது. இந்த சரிவில் இருந்து நியூஸிலாந்து அணியை மீட்கும் முயற்சியில் சாண்ட்னரும், லூக் ரான்ஜியும் ஈடுபட்டனர். மிகப் பொறுமையாக ஆடிய இவர்கள் நேற்று மேலும் விக்கெட்கள் சரியாமல் பார்த்துக்கொண்டனர். இதனால் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்களை எடுத்திருந்தது.

4 விக்கெட்களை இழந்த நிலையில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற மேலும் 341 ரன்களை எடுக்கவேண்டி உள்ளது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளதால் நியூஸிலாந்து அணி அந்த ஸ்கோரை எடுப்பது கடினமாக இருக்கும் என்று கருதப் படுகிறது. அதே நேரத்தில் இந்திய அணி ஜெயிக்க இன்னும் 6 விக்கெட்களை எடுத்தால் போதும் என்ற நிலையில் வெற்றியை நெருங்கியுள்ளது.

அஸ்வின் மகிழ்ச்சி

200 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தது குறித்து நிருபர்களிடம் கூறிய அஸ்வின், “2014-15ம் ஆண்டில் நடந்த ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு நான் சிறப்பாக பந்துவீசுவதாக கருதுகிறேன். முன்பைவிட நன்றாக திட்டமிட்டு விக்கெட்களை வீழ்த்துகிறேன். இது மகிழ்ச்சியளிக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்களை எடுத்தபோதிலும் நான் இன்னும் நீண்டதூரம் செல்லவேண்டி உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் எப்போதும் அன்றைய நாளின் ஆட்டத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்து செயல்படுகிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT