கட்டாக்கில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி யுவராஜ், தோனி ஆகியோரின் அதிரடி சதங்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 381 ரன்களை குவித்துள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து விரட்டலை எண்ணத்தில் கொண்டு இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது. கிறிஸ் வோக்ஸ் புதிய பந்தில் இந்திய பேட்ஸ்மென்களான ஷிகர் தவண், ராகுல், விராட் கோலி ஆகியோரது பலவீனங்களைப் பயன்படுத்தி மூவரையும் வீழ்த்தி 25/3 என்று தடுமாறச் செய்தனர்.
ஆனால் அதன் பிறகு... இந்தப் பிட்சில் முதல் 3 விக்கெட்டுகளே பெரிய விஷயம் என்பது போல் இங்கிலாந்தின் பந்து வீச்சும் அமைய, யுவராஜ் சிங்கின் அற்புதமான டைமிங் மற்றும் அதிரடி, தோனியின் தொடக்க நிதானம் பிறகு அதிரடி என்ற கூட்டணியில் இருவரும் இணைந்து 38 ஓவர்களில் 256 ரன்களைச் சேர்த்தனர். இதனால் ஆட்டம் அப்படியே மாறிப்போனது. தோனி அனைத்தையும் மறந்து சுதந்திரமாக ஆடினார். அவரது ஆட்டத்தில், முகத்தில் அழுத்தத்தின் சாயல் துளிகூட இல்லை. இதைத்தான் ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்த்தனர், இந்த வகையில் அவர் விருந்து படைத்தார் என்றே கூற வேண்டும்.
யுவராஜ் சிங் 127 பந்துகளில் 21 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 150 ரன்கள் விளாசினார். தோனி 10 பவுண்டரிகள் 6 மிகப்பெரிய சிக்சர்களுடன் 122 பந்துகளில் 134 ரன்களை புரட்டி எடுத்தார், கடைசியில் கை மணிக்கட்டு பிரச்சினையினால் டீப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தோனி தொடக்கத்தில் 15 பந்துகளில் 1 ரன்னே எடுத்தார், அப்போது ஓவர் பிட்ச், ஷார்ட் பிட்ச் பந்துகளையும் தடுத்தாடினார், ஏனெனில் 3 விக்கெட்டுகள் விழுந்து விட்டதாம்! 23வது பந்தில் முதல் பவுண்டரி அடித்தார். பிறகு செட்டில் ஆகி வெளுத்து வாங்கினார், ஒரு சிக்ஸ் குறிப்பாக ஷார்ட், வேகம் குறைந்த பந்தை மிட் ஆனில் டென்னிஸ் சர்வ் ஷாட் போல் சிக்ஸ் அடித்தது அபாரமாக இருந்தது.
யுவராஜ் சிங் 2011க்குப் பிறகு சதம் எடுத்தார், இருவருமே நீண்ட இடைவெளிக்குப் பிறகு சதம் எடுத்தனர். யுவராஜ் சிங் தனது முந்தைய அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரான 139 ரன்களைக் கடந்து சென்றார், இதுதான் அவரது சிறந்த அதிகபட்ச ஸ்கோர்.
யுவராஜ் சிங்கிற்கு இறங்கியவுடன் பவுன்சர் வீசி டெஸ்ட் செய்தனர் இங்கிலாந்து, ஆனால் 400 பிட்சில் இதெல்லாம் சாத்தியமா, வெளுத்துக் கட்டினார் யுவராஜ் ஆனால் மிகவும் ஸ்டைலிஷ் ஆக ஆடினார். 35 வயதில், 3 ஆண்டுகள் கிரிக்கெட் கரியர் என்ன ஆகும் என்று தெரியாத நிலையில் இருந்த யுவராஜுக்கு இங்கிலாந்து மீண்டும் வாழ்வளித்தது. பந்து பிட்ச் ஆனால் கன்னாபின்னாவென்று அடி விழுகின்றது என்று ஒரு கட்டத்தில் பந்தை பிட்ச் செய்யாமலேயே இங்கிலாந்து வீசினார்கள் போலும்! அவ்வளவு புல்டாஸ்கள்.
இந்த அதிரடியில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்தவர் என்ற சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய வீரரானார் தோனி. இந்த ஷாட்டும் 2011 உலகக்கோப்பை இறுதியில் வெற்றிபெற அடித்த சிக்சர் ஷாட்டும் ஒன்றே போன்று அமைந்தன.
மொத்தத்தில் இந்திய அணி இந்த இன்னிங்ஸில் 42 பவுண்டரிகள் 12 சிக்சர்களை அடித்துள்ளது. அதாவது 240 ரன்களை பவுண்டரிகளிலேயே எடுத்துள்ளது இந்திய அணி. முதல் 10 ஒவர்களில் 43/3, 20-வது ஓவரில் 92/3, 25-வது ஓவரில் 132/3, 30-வது ஓவரில் 167/3, 35-வது ஓவரில் 208/3, 40-வது ஓவரில் 261/3, கடைசி 10 ஒவர்களில் 120 ரன்கள். 281/6. கேதர் ஜாதவ் 10 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 22 ரன்களையும், பாண்டியா 19 ரன்களையும், ஜடேஜா 16 ரன்களையும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் அபாரமாக வீசி 10 ஓவர்களில் 60 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லியாம் பிளெங்கெட் 10 ஓவர்களில் 91 ரன்கள் சாத்துமுறை நடத்தப்பட்டு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்டோக்ஸ் 9 ஓவர்களில் 79 ரன்கள், மொயின் அலி 6 ஒவர்கள் 33 ரன்கள் என்று அதிசிக்கனம் காட்டிய வீச்சாளரானார்.
தொடரில் நிலைத்து நிற்க இங்கிலாந்து வெற்றிபெற்றேயாக வேண்டும், விளக்கு வெளிச்சத்தில் பெரிய இலக்கைத் துரத்துவது கடினமே, ஆனாலும் பிட்ச் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அள்ள அள்ள குறையாது அள்ளித்தரும் பிட்ச்!