தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை எடுத்துக்கொண்ட விவகாரத்தில் மரியா ஷரபோவா இரண்டு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஊக்க மருந்து சோதனையில் ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் ஷரபோவா தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை எடுத்துக் கொண்டது உறுதியானது. 5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஷரபோவா தனது உடல் நலத்துக்காக 'மெல்டோனியம்' எனப்படும் மருந்தை எடுத்துக்கொண்டது சோதனையில் தெரிய வந்தது. இதனையடுத்து ஷரபோவா மார்ச் மாதத்தில் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
தற்போது சர்வதேச டென்னிஸ் தீர்ப்பாயம், அவரை போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து இரண்டு வருடங்களுக்கு இடைநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதாக மரியா ஷரபோவா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள ஷரபோவா,
"தீர்ப்பாயம், நான் ஊக்க மருந்துக்கு எதிரான விதிமுறைகளை வேண்டுமென்றே மீறவில்லை என்று கூறியுள்ளது. அதனால் நான், இந்த நியாயமில்லாத, கடுமையான தடைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போகிறேன்.
தீர்ப்பாயம் நான் எதையும் வேண்டுமென்றே செய்யவில்லை என்று கூறியபோதிலும் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு என்னை நான்கு வருடங்களுக்கு இடைநீக்கம் செய்யச்சொல்லி, தீர்ப்பாயத்துக்கு ஆலோசனை வழங்கியிருந்தது. அதை ஏற்க மறுத்த தீர்ப்பாயம் இரண்டு வருடங்களுக்கு என்னை இடைநீக்கம் செய்துள்ளது. வேண்டுமென்றே நான் ஊக்க மருந்தைப் பயன்படுத்தவில்லை என்று கூறிவிட்டு எதற்காக இடைநீக்கம் செய்ய வேண்டும்? அதனால் நான் விளையாட்டுக்கான நடுவர் தீர்ப்பு மன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளேன்" என்று கூறியுள்ளார்.
மெல்டோனியம் பின்னணியும் தடை சர்ச்சையும்
மரியா ஷரபோவா கடந்த 10 ஆண்டுகளாக மெல்டோனியம் என்ற மருந்தை உட்கொண்டு வந்துள்ளார், அவரது குடும்பத்தின் பரம்பரை நோயான நீரிழிவு நோய் மற்றும் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டதால் ஷரபோவாவுக்கு மருத்துவர் இந்த மருந்தை சிபாரிசு செய்துள்ளார்.
மெல்டோனியம் என்பது நீரிழிவு மற்றும் குறை மெக்னீசியம் ஆகிய சிகிச்சைகளுக்கு பயன்படும் மருந்தாகும். கடந்த ஜனவரி 1-ம் தேதி உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம், மெல்டோனியத்தை தடை செய்தது. ஷரபோவா மெல்டோனியம் அடங்கிய மருந்தை எடுத்துக் கொள்ள தொடங்கிய போது உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையத்தின் தடைசெய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் மெல்டோனியம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.