தரம்சலாவில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகளுக்கு எதிராக 330 ரன்களை எடுத்த இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 80வது முறையாக 300 ரன்களைக் கடந்தது.
80 முறை 300 ரன்களைக் கடந்த அணி என்ற வகையில் அதிகம் 300 ரன்களுக்கும் மேல் அடித்த ஒரே அணி இந்திய அணியே. ஆனாலும் 300 ரன்களுக்கு மேல் அடித்த போட்டிகளில் வெற்றி விகிதம் பார்த்தால் குறைவாகவே உள்ளது. அதாவது 10 அணிகளில் இந்தியா அல்லாத டாப் 6 அணிகள் 300க்கும் மேல் ரன்கள் எடுத்த போது அதிக வெற்றிகளை சாதித்துள்ளன. இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் 300 ரன்களுக்கும் மேல் எடுத்தும் வெற்றி விகிதத்தில் குறைவாக உள்ள அணிகளாகும்.
20வது ஒருநாள் சதத்தை எடுத்த விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இளம் வயதிலேயே 3-வது இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களையும், சவுரவ் கங்குலி 22 ஒருநாள் சதங்களையும் எடுத்துள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் உள்நாடாயினும், வெளிநாடாயினும் 50 ரன்கள் சராசரி வைத்துள்ளது 2 வீரர்கள்தான் ஒன்று மைக்கேல் பெவன், மற்றொருவர் விராட் கோலி, விராட் கோலி இந்தியாவில் 52.79 சராசரி வைத்துள்ளார். அயல்நாட்டு மைதானங்களிலும் 50 ரன்கள் சராசரி வைத்துள்ளார்.
24 முறை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 300 ரன்களுக்கும் மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருமுறை கூட இந்த இலக்குகளை மே.தீவுகள் வெற்றிகரமாகத் துரத்தியதில்லை.
ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் நேற்று 22 ரன்கள் கொடுத்தார். இதுதான் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் ஒரு ஓவரில் கொடுக்கும் அதிக ரன்களாகும். மேலும் 9 ஓவர்களில் 80 ரன்களை நேற்று விட்டுக் கொடுத்த ரவீந்தர் ஜடேஜாவின் மோசமான பந்து வீச்சு இதுவேயாகும்.