இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையே, சென்சூரியனில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் மழையால் கைவிடப்பட்டது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா வெற்றியேதும் பெறாமல் முடித்துள்ளது.
சென்சூரியனில் நேற்று இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரை தென் ஆப்பிரிக்கா கைபற்றியிருந்ததால், இந்த போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பில் இருந்தது. ஆனால் மழையின் காரணமாக அது பொய்த்துப் போனது
தென் ஆப்பிரிக்கா பேட்டிங்
முன்னதாக டாஸை வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்தெடுத்தது. அந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளர்கள் ஸ்டெய்ன், மார்கல் மற்றும் நட்சத்திர வீரர் காலிஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. முதல் இரண்டு போட்டிகளைப் போல் இல்லாமல், 7 ஓவர்களுக்குள்ளாகவே தென் ஆப்பிரிக்கா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆம்லாவின் விக்கெட்டை ஷமி வீழ்த்த, ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி இஷாந்த் சர்மா அசத்தினார்.
ஆனால் சென்ற இரண்டு ஆட்டங்களில் சதம் அடித்த டி காக் மற்றும் கேப்டன் டி வில்லியர்ஸ் இருவரும் பொறுப்பாக ஆடி, அணியை இக்கட்டிலிருந்து மீட்டனர். அணியின் ஸ்கோரை ஸ்திரமாக்கிய பிறகு பவர் ப்ளே ஒவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தனது 116வது பந்தில் டி காக் சதமடித்தார். இந்த தொடரின் மூன்று போட்டிகளில் அவர் அடிக்கும் மூன்றாவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்கிற சாதனையையும் இதன் மூலம் அவர் அடைந்தார். அடுத்த ஓவரிலேயே, இஷாந்த் சர்மாவின் பந்தில் 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
டி வில்லியர்ஸ், மில்லர் அதிரடி
பின்பு களமிறங்கிய டேவிட் மில்லருடன் கைகோர்த்த டி வில்லியர்ஸ், அவர் பங்கிற்கு இந்தியாவின் பந்து வீச்சை பதம் பார்த்தார். 96 பந்துகளில், 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் டி வில்லியர்ஸ் சதமடித்தார். 109 ரன்கள் எடுத்திருந்த நிலையில், உமேஷ் யாதவின் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் டேவிட் மில்லர் தனது அதிரடியை விடாமல் தொடர்ந்து, 32 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 34 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 5 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடக்கம்.
இந்திய அணியின் தரப்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும், ஷமி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்காவின் முன்னணி பந்து வீச்சாளர்கள் இருவரும் நேற்று விளையாடததால், கடினமான இலக்காக இருந்தாலும் அதை இந்தியா எட்டி விடும் என்று ரசிகர்கள் நம்பியிருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக மழை பெய்ததால், வேறு வழியின்றி ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் 2-0 என்கிற கணக்கில், தென் ஆப்பிரிக்கா இந்தத் தொடரை தோல்வியின்றி வெற்றி பெற்றது.