வங்கிகளுக்கு 9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்துள்ள விஜய் மல்லையா, லண்டனில் அமர்ந்தபடி தனது மகன் சித்தார்த் மல்லையாவுடன் சேர்ந்து ஜாலியாக ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியை பார்த்து ரசித்ததோடு அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடன் பாக்கி மற்றும் கிங்பிஷர் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள பாக்கி என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட விஜய் மல்லையா திடீரென லண்டன் தப்பியோடிவிட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
அதேநேரம் இந்தியாவின் கோரிக் கையை ஏற்று மல்லையாவை நாடு கடத்த முடியாது என்றும், அதற்கு தங்கள் சட்டம் இடம்தரவில்லை என்றும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.
இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் நடைபெற்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டியை மல்லையா தனது மகன் சித்தார்த்துடன் அமர்ந்து டிவியில் பார்த்து ரசித்துள்ளார். இந்த வீடியோவை சித்தார்த் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி யுள்ளார்.
அதில், லண்டனில் நானும், எனது தந்தையும் ஐபிஎல் இறுதிப்போட்டியை பார்க்கிறோம். மொனாக்கோவில் நடைபெற்ற பார்முலா 1 கார்பந்தயத்தில் போர்ஸ் இந்தியா 3-வது இடம் பிடித்ததைவிட இந்த ஆட்டம் சிறப்பானதாக இல்லை என்றும் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
மல்லையா தனது மகன் மற்றும் வேறு சிலருடன் பெரிய அளவிலான திரையில் போட்டியை பார்த்தபடி ‘கோ ஆர்சிபி’ என உற்சாகமூட்டியபடி அந்த வீடியோவில் வலம் வருகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வரும் நிலையில் சர்ச்சையையும் உருவாக்கி உள்ளது.