விளையாட்டு

யு-19 உலகக் கோப்பை: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

செய்திப்பிரிவு

19 வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

துபையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விஜய் ஸோல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பெய்ன் 24 ரன்களிலும், ஹெர்வாட்கர் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டரில் சஞ்ஜூ சாம்சன் 101 பந்துகளில் 68 ரன்கள், சர்ஃப்ராஸ் கான் 78 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு சமி அஸ்லாம்-இமால் உல் ஹக் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. அவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 23.4 ஓவர்களில் 109 ரன்கள் சேர்த்தனர். இமாம் உல் ஹக் 39 ரன்களும், சமி அஸ்லாம் 64 ரன்களும் எடுத்தனர்.

எனினும் பின்னர் வந்தவர்கள் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.இறுதியில் அந்த அணி 48.4 ஓவர்களில் 222 ரன்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்தியத் தரப்பில் தீபக் ஹூடா 10 ஓவர்களை வீசி 41 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

74 ரன்கள் குவித்த சர்ஃப்ராஸ் கான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT