விளையாட்டு

2015 உலகக்கோப்பை காலிறுதி: 2 ‘தவறான தீர்ப்புகள்’ நினைவுகளிலிருந்து மீள முடியாத வ.தேச ரசிகர்கள்

பிடிஐ

வியாழனன்று சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ளும் நிலையில் 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த நினைவுகளிலிருந்து வங்கதேச ரசிகர்கள் இன்னமும் மீளவில்லை என்று வங்க மொழி நாளிதழ் ஒன்றின் செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாயன்று வங்கமொழி நாளிதழான ‘ஜுகாண்டர்’ என்ற ஊடகத்தில், 2015 உலகக்கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிராக இந்தியாவுக்குச் சாதகமாக 2 நடுவர் தீர்ப்புகள் அளிக்கப்பட்டதை இன்னமும் வங்கதேச ரசிகர்கள் மனதிலிருந்து அகலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா அந்த போட்டியில் 137 ரன்களை விளாசினார், அவர் 90 ரன்களில் இருந்த போது இந்திய அணி 196 ரன்களை 40 ஓவர்களில் எடுத்திருந்த போது ரூபல் ஹுசைன் பந்து ஒன்றை நடுவர் நோ-பால் என்றார், அது பற்றி பெரிய அதிருப்தியும் விவாதங்களும் அப்போது எழுந்தது. இடுப்புயர புல்டாஸ் நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது, ரோஹித் சர்மா டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார்.

டிவி ரீப்ளேயில் அது நோ-பால் போலவும் இருந்தது, நோ-பால் கொடுத்திருக்க வேண்டாம் போலவும் இருந்தது.

பிறகு வங்கதேசம் விரட்டும் போது 17-வது ஓவரில் மஹமுதுல்லா 21 ரன்களில் இருந்த போது ஷிகர் தவண் பவுண்டரி அருகே பிடித்த கேட்ச் சர்ச்சையானது. அதாவது தவண் எல்லைக்கோட்டை மிதித்து விட்டது போல் தெரிந்தது. இந்தியா 109 ரன்களில் வெற்றி பெற்றது. ஆனால் வங்கதேச ரசிகர்கள் கடும் ஆவேசன்மடைந்து பாகிஸ்தான் நடுவர் அலீம் தார் உருவ பொம்மையை எரித்து ஆர்பாட்டம் செய்தனர்.

நாளைய போட்டியில் ரிச்சர்ட் கெட்டில்பரோ, குமார் தர்மசேனா நடுவர்களாக பணியாற்றும் நிலையில் 2015 உலகக்கோப்பையில் நடந்த இந்த 2 தவறுகள் குறித்து வங்கதேச ரசிகர்கள் இன்னமும் அச்சத்தில் உள்ளதாக இந்த நாளிதழ் ரசிகர்கள் சிலரை பேட்டி கண்டு செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வங்கதேச பயிற்சியாளர் சந்திகா ஹதுரசிங்கா கூறும்போது, “நாங்கள் மற்றவர்களை விட சிறந்த பந்து வீச்சை வைத்துள்ளோம். பலதரப்பட்ட பந்துகளை வீசும் திறமை உள்ளது. எங்களது ஒவ்வொரு வேகப்பந்து வீச்சாளரும் உங்களுக்கு வேறு வேறு ருசிகளை அளிப்பார்கள்” என்று இதே நாளிதழில் தெரிவித்துள்ளார்.

அதாவது, “எங்கள் பவுலர்கள் சிறந்தவர்கள்தான். நான் இந்திய அணியை குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களிடமும் நல்ல வேகப்பந்து வீச்சு உள்ளது. உதவிகரமான பிட்சில் அவர்கள் மிகச்சிறந்த வீச்சாளர்கள். ஆனால் எங்களிடம் பலதரப்பட்ட திறமைகள் உடைய 4 பவுலர்கள் உள்ளனர்” என்றார்.

SCROLL FOR NEXT