விளையாட்டு

ஆட்டத்தை நடத்தியிருக்கலாம்: தோனி, பிராத்வெய்ட்டின் மாறுபட்ட கருத்துகள்

இரா.முத்துக்குமார்

அமெரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரின் 2-வது போட்டி மைதான நிலைமைகள் காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது குறித்து இந்திய, மே.இ.தீவுகள் கேப்டன்கள் மற்றுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

கவலையை ஏற்படுத்திய களப்பகுதிகள் பற்றி பிராத்வெய்ட் கூறும்போது, “மைதானத்தில் 2 அல்லது 3 இடங்கள் பாதுகாப்பில்லாமல் இருந்தது. பெவிலியனிலிருந்து பார்க்கும் போது, பவுலர் ரன் அப் பகுதிகள், மிட் ஆன், மேற்குப் புறத்திலும் ஒரு இடம் சொதசொதவென தெரிந்தது.

எனவே என் கருத்துப்படி பாதுகாப்பற்றது, விளையாடுவதற்கு ஏற்றதல்ல. ரன் அப்களை கூட ஏற்று கொண்டு ஆடியிருந்தாலும், பந்தை பீல்டர் துரத்திச் செல்லும் போது சில இடங்களில் வழுக்கிவிட்டால் அத்துடன் அவரது கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும். நாங்கள் விளையாட விருப்பம் கொண்டிருந்தோம் என்றாலும் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையுடன் விளையாட முடியாது, நடுவர்களும் இதை மனதில் கொண்டுதான் ஆட்டத்தை நிறுத்தினர்” என்றார்.

பிராத்வெய்ட்டின் கருத்தை மறுக்குமாறு தோனி கூறியதாவது:

நடுவர் எங்களிடம் கூறியது என்னவெனில் இங்கு ஈரத்தை முற்றிலும் களைய போதுமான உபகரணங்கள் இல்லை, மைதான நிலைமை மோசமாக உள்ளது எனவே முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே ஆட்டம் சாத்தியம் என்றார்கள். இது ஆட்டத்தை நடத்துபவர்களாக அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு, ஆனால் எனது 10 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் இதை விட மோசமான மைதான நிலைமைகளில் ஆடியுள்ளோம் என்பதே.

நான் சரியாக நினைவில் வைத்திருக்கிறேன் என்றால் 2011-ல் இங்கிலாந்தில் ஒட்டுமொத்த ஒருநாள் தொடரிலும் மழையில்தான் ஆடினோம், ஈரத்தில்தான் ஆடினோம். எனவே நடுவர் முடிவுதான் ஆடலாம் என்று அவர்கள் முடிவெடுத்தால் ஆடலாம், ஆட முடியாது என்றால் ஆட முடியாது அவ்வளவுதான்.

நானும் பிராவோவும் நின்று கொண்டிருந்த மேற்குப் புறத்தில்தான் பிரச்சினை என்றனர், ஆனால் பவுலர்கள் ரன் அப்பிற்கு அப்பால்தான் பாதுகாப்பற்ற அந்த இடம் இருந்தது. அவர்கள் அணியில் அங்கிருந்து ஓடி வந்து வீசும் ஷோயப் அக்தர் இல்லாத நிலையில் கவலையொன்றுமில்லை.

இவ்வாறு கூறினார் தோனி.

SCROLL FOR NEXT