நாளை வங்கதேசத்துக்கு எதிராக ஹைதராபாத்தில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் முச்சத நாயகன் கருண் நாயர் இடம்பெறுவாரா அல்லது ஃபார்மில் இல்லாத, காயத்திலிருந்து மீண்டுள்ள ரஹானே இடம்பெறுவாரா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
ஆனால் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, கருண் நாயர் தனது வாய்ப்பை நன்றாகப் பற்றிக் கொண்டார், சென்னையில் அவர் முச்சதம் அடித்தது அருமையானதுதான், ஆனால் அஜிங்கிய ரஹானே அணிக்கு செய்ததை மறுக்க முடியாது என்று சூசகமாக ரஹானே சார்பாகவும், கருண் நாயர் உடனடி தேர்வு குறித்த ஐயங்களை எழுப்பியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ரஹானே விரல் காயம் காரணமாக ஆடவில்லை. இதனையடுத்து கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டு அவர் அதிரடி முச்சதத்தை சென்னையில் அடித்தார். இந்நிலையில் கருண் நாயர் அணியிலிருந்து நீக்கப்பட்டால் முச்சதம் அடித்த பிறகு அடுத்த டெஸ்ட் போட்டியிலேயே ஆடமுடியாத அரிதான வீரராவார் அவர். மே.இ.தீவுகளில் 1925-ம் ஆண்டு ஆன்டி சந்தாம் என்ற வீரர் 325 ரன்களை ஒரு இன்னிங்ஸில் எடுத்த பிறகு அடுத்த டெஸ்ட் போட்டியை ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவருக்கு அப்போது வயது 39 என்பதும் கவனிக்கத்தக்கது.
கேப்டன் விராட் கோலி வெளிப்படையாகவே கருண் நாயரின் முச்சதத்தை கேள்விக்குட்படுத்தி ரஹானேவுக்கு ஆதரவாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “ஒருவரது ஓரு போட்டி ஆட்டம், மற்றொரு வீரரின் 2 ஆண்டுகால கடின உழைப்பை மறைத்து விடாது. கடந்த 2 ஆண்டுகளாக ரஹானே இந்திய அணிக்கு செய்ததை நாம் மறக்க முடியாது. இந்த வடிவத்தில் கிட்டத்தட்ட 50 ரன்கள் சராசரி வைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் திடமான ஒரு பேட்ஸ்மெனாக ரஹானே இருந்து வருகிறார். ரஹானே இல்லாத இடத்தை கருண் பூர்த்தி செய்தார், மிகவும் அபாரமாகவே பூர்த்தி செய்தார், அவர் சாதனை மட்டற்றது. மிகப்பெரிய விஷயம்தான், ஆனால் இது ஒரு டெஸ்ட் போட்டி, இதற்காக ரஹானேயின் 2 ஆண்டுகால கடின உழைப்பை, பங்களிப்பை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. எனவே அவர் உடல்தகுதி பெற்றுவிட்டார் என்றால் எப்போது வேண்டுமானாலும் நேரடியாக அணியில் நுழையலாம். இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில் இதுதான் என் கருத்து.” என்றார் கோலி.
ஆனால் முச்சதம் அடித்த ஒரு வீரர் தனது அடுத்த டெஸ்ட் போட்டியை ஆட முடியாமல் போவது அவரது உத்வேகத்தை நிச்சயமாகக் கெடுக்கும் செயல்தான்.
எப்போதும் காயத்திலிருந்து வருபவரை சற்று பொறுத்துதான் அணியில் எடுக்க வேண்டும், நேரடியாக அணியில் இடம்பெறுவது இந்தியா போன்ற அணிகளில்தான், அது சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் போன்ற இன்றியமையாத நட்சத்திர வீரர்களுக்குரிய முன்னுரிமை, அதனை நாம் ரஹானேவுக்கு பொருத்த முடியுமா என்று தெரியவில்லை என்று கிரிக்கெட் வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.