ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அநீதி இழைக்கப்பட்டதை எதிர்த்த இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு ஆதரவாக இந்தியக் குத்துச் சண்டை அமைப்பு உலக குத்துச் சண்டை அமைப்பிடம் கோரிக்கை வைத்துள்ளது.
அதாவது சரிதா தேவி வெண்கலப் பதக்கத்தை வாங்க மறுத்ததால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் விளையாட இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்தத் தடையை விலக்கக் கோரி இந்தியக் குத்துச் சண்டை அமைப்பு உலக குத்துச் சண்டை கூட்டமைப்புக்கு கோரிக்கை வைத்துள்ளது.
சரிதா தேவி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதையும், இதற்கு முன்பு அவரது அபாரமான நடத்தைகளையும் விவரித்து சரிதா தேவிக்கு அளித்த தடையை நீக்க வேண்டும் என்று இந்திய குத்துச் சண்டை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக இந்தியக் குத்துச் சண்டை அமைப்பின் தலைவர் சந்தீப் ஜஜோடியா தெரிவித்தார்.
"சரிதா தேவியின் எதிர்வினை மிகவும் இயல்பானது, முன் கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல, தோல்வியை அடுத்து சாதாரணமாக ஒருவருக்கு ஏற்படும் ஏமாற்றமே அது." என்றார் ஜஜோடியா.
உலகக் குத்துச் சண்டை கூட்டமைப்பு சரிதா தேவி விளையாட தடை விதித்திருப்பதால், நவம்பர் 19-ஆம் தேதி முதல் கொரியாவில் நடைபெறிம் குத்துச் சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.