விளையாட்டு

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு: பிங்க்கில் தென் ஆப்பிரிக்க அணி

செய்திப்பிரிவு

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கி முதல் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க வீரர்கள், எப்போதும் போல அணியிம் பச்சை நிற சீருடையை அணியாமல், பிங்க் நிற சீருடையை அணிந்துள்ளனர்.

மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவே இந்த நிற உடையில் தென் ஆப்பிரிக்க அணி ஆடி வருகின்றனர். இதை ஆட்டத்திற்கு முன்னரே அறிவித்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், மைதானத்திற்கு வரும் ரசிகர்களையும் பிங்க் நிற உடை அணிந்து வருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்த நாளை பிங்க் தினமாகவும் அவர்கள் கொண்டாடுகின்றனர்.

ஆட்டத்தின் முடிவில், சிறந்த ஆடை அணிந்துள்ள ரசிகர் மற்றும் குடும்பத்தை தேர்வு செய்து கவுரவிக்கவும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதோடு, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்கள் மார்பகப் புற்று நோய் விழிப்புணர்விற்காக நிதியுதவி வழங்குகின்றனர். தென் ஆப்பிரிக்க அணி பிங்க் உடையில் ஆடுவது, இது மூன்றாவது முறை.

2011ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்த உடையில் தோன்றியதே முதல் முறை. இந்த ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் பிங்க் உடையில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியினர், ஆட்டத்தில் வெற்றி பெற்றனர். அந்த அணியின் ஹஷிம் ஆம்லா மற்றும் கேப்டன் டீவில்லர்ஸ் இருவரும் அப்போது சதம் அடித்தனர். அந்த அதிர்ஷடம், இன்றைய போட்டியிலும் தொடருமா என பொருத்திருந்து பார்ப்போம்.

SCROLL FOR NEXT