விளையாட்டு

கும்ப்ளேவிடம் கற்பது பொன்னான வாய்ப்பு: தொடக்க வீரர் முரளி விஜய் கருத்து

பிடிஐ

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த வாரத்தில் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தலைமையில் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈட்டுபட்டு வருகின்றனர்.

நேற்றைய பயிற்சியின் முடிவில் தொடக்க வீரர் முரளி விஜய் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

என்னுடைய முதல் டெஸ்ட் போட்டி கும்ப்ளேயின் கடைசி போட்டியாக அமைந்தது. அவருடன் நான் நீண்ட நேரம் செலவழித்தது கிடையாது. ஆனால் குழந்தைப் பருவத்தில் இருந்து கும்ப்ளேயின் தீவிர ரசிகன் நான். அவருடன் கிரிக்கெட் பற்றி பேசுவதற்கும், தெரிந்து கொள்வதற்கும் இளம் வீரர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. கும்ப்ளேயின் பயிற்சி காலம் எங்களுக்கு மிகச்சிறந்த நேரமாக இருக்கும்.

கும்ப்ளே-விராட் கோலி கூட்டணி எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற முடியாது. அதற்குண்டான அவசரமும் இப்போது இல்லை. அடுத்த 12 மாதங்கள் எங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.

ரவி சாஸ்திரி பயிற்சியும் சிறப்பாகவே இருந்தது. அதேபோல் தற்போது கும்ப்ளே பயிற்சியில் விளையாட உள்ளோம். அவர் இந்தியாவின் நம்பமுடியாத வகையிலான சிறந்த வீரராக திகழ்ந்தவர். மேற்கிந்தியத் தீவுகள், கிரிக்கெட் விளையாடுவதற்கு சிறந்த இடம். இந்த தொடரை நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்.

எங்களது தன்னம்பிக்கையை அதிகரித்து ஊக்கப்படுத்தும் வகையில் இந்த தொடர் அமையும். தொடரை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அது அடுத்து நடைபெற உள்ள உள்ளூர் தொடர்களுக்கு உதவியாக இருக்கும். கடந்த முறை நான் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. இம்முறை சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு முரளி விஜய் கூறினார்.

SCROLL FOR NEXT