இந்தியா நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு நியூஸி. அணி 329 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் வில்லியம்சன் மற்றும் மெக்கல்லம் ஆகியோர் சதம் அடித்தனர்.
ஆக்லாந்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் முன்னதாக இந்தியா டாஸை வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. நியூசிலாந்தின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஃபுல்டன் 13 ரன்களில் ஜாகீர் கானின் பந்தில் வெளியேறினார். ருதர்ஃபோர்ட் 6 ரன்கள் மட்டுமே எடுத்து இஷாந்த் சர்மாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஒருநாள் தொடரில் இரண்டு சதங்கள் அடித்த ராஸ் டைலர் பின்னர் களமிறங்கினார். ஆனால் அவரும் 3 ரன்களுக்கு இஷாந்த் சர்மாவின் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் வில்லியம்சுடன் களமிறங்கிய கேப்டன் மெக்கல்லம், அணியின் ஸ்கோரை நிலைக்கச் செய்யும் முயற்சியில் இறங்கினார். அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளார்களுக்கு இந்த இருவரு விக்கெட்டுகளை வீழ்த்துவது சவாலாக இருந்தது.
உணவு இடைவேளையின் போது, மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்காமல் 54 ரன்கள் மட்டுமே நியூஸிலாந்து எடுத்திருந்தது.
உணவு இடைவேளைக்குப் பிறகு இந்தியாவின் பந்துவீச்சு, ஒரு நாள் தொடரை பிரதிபலிக்கும் வண்ணம் மாறியது. தோனி, பந்து வீச்சாளர்களை மாற்றியும், சராமாரியாக ரன்கள் வந்த வண்ணம் இருந்தது. மெக்கல்லம், வில்லியசன் இருவரும் அரை சதத்தைக் கடந்து தொடர்ந்து ரன் குவித்த வண்ணம் இருந்தனர்.
மெக்கல்லம், வில்லியம்சன் சதம்
ஆட்டத்தின் 58-வது ஓவரில் ஜடேஜாவின் பந்தில் சிக்ஸர் அடித்து மெக்கல்லம் தனது சதத்தைக் கடந்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் எட்டாவது சதம், இதில் இந்தியாவுக்கு எதிராக மட்டும் 3 சதம் அடித்துள்ளார்.
அடுத்த சில ஓவர்களில் வில்லியம்சன்னும் 138 பந்துகளில் தனது சதத்தைக் கடந்தார். ஒரு நாள் தொடரில் தொடர்ந்து அரை சதங்கள் அடித்து, சதத்தை தவற விட்ட வில்லியம்சன், முதல் டெஸ்ட் போட்டியிலேயே தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.
ஒரு வழியாக ஆட்டத்தின் 69-வது ஓவரில், ஜாகீர் கான் வீசிய பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வில்லியம்சன் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் மெக்கல்லமுடன் இவரது பார்ட்னர்ஷிப் அணிக்கு 221 ரன்களைத் தேடித்தந்தது.
தொடர்ந்து களமிறங்கிய கோரே ஆண்டர்சன், ஆரம்பத்தில் சற்றுத் தடுமாறினாலும், சுதாரித்து ஆட ஆரம்பித்தார். மேற்கொண்டு இந்திய பந்து வீச்சாளர்களின் எந்த வியூகமும் பலிக்காமல் போனது. இதனால் இன்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து நியூஸி. அணி 329 ரன்கள் குவித்திருந்தது.
ஒரு நாள் தொடரை இழந்து விட்ட நிலையில், டெஸ்ட் தொடரிலாவது இந்தியா தனது திறமையை நிரூபிக்குமா என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. இன்றைய ஆடத்தின் துவக்கத்தில் பந்துவீச்சாளர்கள் அதிரடியாக விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அந்தச் சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார்கள். அணியின் வேகப்பந்து வீச்சு, இன்னமும் கவலைக்குரியதாகவே காட்சியளிக்கிறது. நாளைய ஆட்டத்தில் உணவு இடைவேளைக்கு முன்பு நியூஸிலாந்து அணியை ஆட்டமிழக்கச் செய்து, இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் குவித்தால் மட்டுமே இந்தப் போட்டியில் இந்தியாவுக்குச் சாதகமான சூழல் உருவாகும்.