இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) புதிய தலைவராக என்.ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச ஸ்குவாஷ் சம்மேளனத்தின் தலைவரான ராமச்சந்திரன், பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் சகோதரர் ஆவார்.
இந்திய கோ-கோ சம்மேளனத்தின் தலைவர் ராஜீவ் மேத்தா பொதுச் செயலாளராகவும், அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் தலைவர் அனில் கண்ணா பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர மேலும் 8 பதவிகளுக்கு புதிய நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐஓஏ பொதுக்குழு கூட்டத்தின்போது புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேசிய ஒலிம்பிக் கமிட்டிகளுக்கான ஐஓசி இயக்குநர் பியர் மிரோ, ஐஓசி நீதி நெறிக்குழு உறுப்பினர் பிரான்சிஸ்கோ ஜெ.எலிஸால்டி, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இயக்குநர் ஜெனரல் ஹுசைன் அல் முஸ்லாம் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த தேர்தல் நடைபெற்றது.
இதன்மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான சஸ்பென்ட் நீக்கப்படும் விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.