லோதா சீர்திருத்தப் பரிந்துரைகள் ஆய்வுக் குழுவில் சர்ச்சைக்குரிய முறையில் சேர்க்கப்பட்ட முன்னாள் பிசிசிஐ நிர்வாகி நிரஞ்சன் ஷா கங்குலி தலைமை சிறப்புக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். அதாவது லோதா பரிந்துரைகளின் படி அவர் தகுதியிழப்புச் செய்யப்பட்டார்.
இது குறித்து நிரஞ்சன் ஷா கூறும்போது, “இந்தியக் குடியரசு தலைவர் வயது 70-க்கும் மேல் இருக்க முடியுமென்றால் நாங்கள் ஏன் 70 வயதுக்கு மேல் பிசிசிஐ-யில் பணியாற்ற முடியாது? பிசிசிஐ நிர்வாகிகள் மீதான வயது வரம்பு குறித்த விவகாரங்கள் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. குடியரசுத் தலைவர் 70 வயதுக்கு மேல் உள்ளவராக பணியாற்ற முடியும் போது நாங்கள் ஏன் பிசிசிஐ-க்கு பணியாற்ற முடியாது?
உடலளவில் மனத்தளவில் தகுதியுடையவராக இருந்தால் நாம் உயிருடன் இருக்கும் வரை பணியாற்றலாம். இது வயதைக் காட்டி பாகுபாடு செய்வதாகவே நான் பார்க்கிறேன்” என்றார்.
லோதா பரிந்துரைகளை ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்த உதவ கங்குலி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது, இதில் ஷா சேர்க்கப்பட்டிருந்தார், ஆனால் அவர் லோதா குழு பரிந்துரைகளைன் படி வயது அடிப்படையில் தகுதி இழக்கிறார்.
“நாங்கள் பிசிசிஐ கூட்டங்களில் லோதா கமிட்டி பரிந்துரைகளை நிறைய விவாதித்துள்ளோம் என்ற அடிப்படையில் இந்தக் குழுவில் எனது அனுபவம் உதவும்.
அதே போல் ஒருமாநிலம் ஒரு வாக்கு என்பதை நான் தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை. ஆனால் நாட்டில் பழமையான ஒரு மாநில வாரியத்தின் வாக்குரிமைகளை நீங்கள் எப்படி பறிக்க முடியும்? மும்பை கிரிக்கெட்டுக்கும் இது பொருந்தும், காரணம் இந்திய கிரிக்கெட்டுக்கு மும்பை கிரிக்கெட் வாரியம் ஏகப்பட்ட பங்களிப்பு செய்துள்ளது.
புதிய உறுப்பினருக்கு வாக்குரிமை அளிப்பதில் எங்களுக்கு பிரச்சினைகள் இல்லை, ஆனால் மேற்கு மண்டலம் ஒரு பெரிய பங்களிப்பாளராக வாக்குரிமை உடையதே.
அதே போல் ஒரு பதவிக்காலம் முடிந்த பிறகு அதே நபர் வேறொரு பதவியில் அமர 3 ஆண்டுகால இடைவெளி தேவை என்ற விதிமுறையும் எனக்குப் பிடிபடவில்லை. நான் இணைச் செயலராக 3 ஆண்டுகள் பணியாற்றினால் செயலராக அடுத்தக் கட்டத்துக்கு நான் தகுதி உடையவனாகிறேன். இதன் மூலம் தொடர்ச்சி இருக்கும்
18 கிரிக்கெட் சங்கங்கள் செய்துள்ள இடைக்கால மனு மீதான உத்தரவு நம்பிக்கையளிக்கும் விதமாக இருக்கும் என்றே கருதுகிறோம்” என்றார் நிரஞ்சன் ஷா.