இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 2-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் தான் விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது அட்லெடிகோ.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் அட்லெடிகோ கோல் அடித்தது. அட்லெடிகோ மிட்பீல்டர் லூயிஸ் கிரேஸியாவிடம் பந்து செல்ல, அவர் கோல் கம்பத்தை நோக்கி கிராஸ் செய்தார். அப்போது வேகமாக முன்னேறிய முன்கள வீரர் பிக்ரூ, மார்பால் பந்தை நிறுத்தி, கண் இமைக்கும் நேரத்தில் அதிவேகமாக கோலடித்தார். இந்தத் தொடரில் அவர் அடித்த 2-வது கோல் இது.
இதன்பிறகு 28-வது நிமிடத்தில் கோலை சமன் செய்யும் வாய்ப்பு நார்த் ஈஸ்ட் அணிக்கு கிடைத்தாலும், அதை அந்த அணி கோட்டைவிட்டது. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் அட்லெடிகோ 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் அட்லெடிகோ வீரர் போர்ஜா மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டார். 84-வது நிமிடத்தில் போர்ஜா 2-வது யெல்லோ கார்டை (ரெட் கார்டு) பெற்றதால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதன்பிறகு 10 பேருடன் விளையாடிய அட்லெடிகோ 90-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது. இந்த கோலை போடி அடித்தார். இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது அட்லெடிகோ.
இன்று போட்டியில்லை
இன்று எந்தப் போட்டியும் கிடையாது. மும்பையில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணியும், புணே சிட்டி அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.