விளையாட்டு

ஸ்ரீதரன் ஸ்ரீராம், மான்ட்டி பனேசர் உதவி: ஆஸி. ஸ்பின்னர் ஓகீஃப் நன்றி

ராமு

புனே டெஸ்ட் போட்டியில் 35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 94/3 என்ற நிலையில் இருந்த இந்திய அணியை 105 ரன்களுக்குச் சுருட்டிய ஓகீஃப், தனது இந்த பந்துவீச்சுக்காக ஸ்ரீதரன் ஸ்ரீராம் மற்றும் மான்ட்டி பனேசர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னாள் தமிழக/இந்திய வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆஸ்திரேலியாவினால் சுழற்பந்து ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதே போல் மான்ட்டி பனேசர் உதவியையும் ஓகீஃப் நாடியுள்ளார்.

இந்நிலையில் 2-ம் நாள் ஆட்டம் முடிந்து ஆஸ்திரேலிய இடது கை ஸ்பின்னர் ஓகீஃப் கூறும்போது, “திட்டப்படி அனைத்தும் நடந்தது. களவியூகம் பீல்டிங்கும் கைகொடுத்தது, குறிப்பாக ஹேண்ட்ஸ்கம்ப் பீல்டிங் சிறப்பு. இன்றைய நாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் நல்ல இன்னிங்ஸுடன் நிறைவுற்றுள்ளது. இன்று முதல் 6 ஓவர்கள் சாதாரணமாகவே இருந்தது.

பிறகு முனையை மாற்றி வீசியதில் பந்துகள் திரும்பின. 2-வது இன்னிங்ஸில் இன்னும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்திய அணி மிகவும் நீண்ட பேட்டிங் வரிசை கொண்டது.

மான்ட்டி பனேசரின் ஆலோசனை பெரிதும் உதவியது, அவர் இங்கு இப்படிப்பட்ட பந்து வீச்சினை வீசியுள்ளார், அதேபோல் ஸ்ரீதரன் ஸ்ரீராமின் உதவியும் அபாரமாக அமைந்தது. காலையில் சரியாக வீசாத போது ஸ்டீவ் ஸ்மித் என்னை அமைதி காக்குமாறு அறிவுறுத்தினார். ஆஸ்திரேலியாவில் வீசுவது போல் வீசினேன், கொஞ்சம் பதட்டமாகவே இருந்தேன், பிறகு சில மாற்றங்களைச் செய்தேன்.

இன்று காலை ஓய்வறையில் பயிற்சியாளர் டேரன் லீ மேன் செல்லமாக என் தலையைத் தட்டினார். திருப்பு முனை ஏற்படுத்திய பந்துவீச்சினால் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT