இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 22, மைக்கேல் லம்ப், ஜோ ரூட், டிம் பிரெஸ்னன், கேப்டன் ஸ்டூவர்ட் பிராட் (ஆட்டமிழக்காமல்) ஆகியோர் தலா 18 ரன்கள் எடுத்தனர். இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆஸ்திரேலிய தரப்பில் ஹேஸில்வுட் 20 ஓவர்களில் 30 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச் 10 ரன்களிலும், கிளன் மேக்ஸ்வெல் 2 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் ஒயிட்டுடன் இணைந்தார் கேப்டன் ஜார்ஜ் பெய்லி.
இந்த ஜோடி அதிரடியாக விளையாட 14.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது ஆஸி. ஒயிட் 45 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 57, பெய்லி 28 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. டெஸ்ட் தொடரில் 5-0 என்ற கணக்கிலும், ஒருநாள் போட்டியில் 4-1 என்ற கணக்கிலும் தோல்வியைத்தழுவிய இங்கிலாந்து, இப்போது டி20 போட்டியிலும் தொடரை இழந்துள்ளது.