7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலிய அணியின் டி20 கேப்டனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு தலைமை வகிக்கவுள்ள 2-வது ஆஸ்திரேலிய கேப்டன் பெய்லி ஆவார். முன்னதாக கடந்த இரு சீசன்களில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட், கடந்த சீசனோடு ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறுகையில், “ஜார்ஜ் பெய்லியை கேப்டனாக தேர்வு செய்தது பஞ்சாப் அணியின் ஒருமித்த முடிவு. அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஷெப்பீல்டு ஷீல்டு போன்ற போட்டிகளில் கேப்டனாக இருந்து சாதித்தவர். அதேபோல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக உள்ளார். அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றி தேடித்தரும் திறமை அவரிடம் இருக்கிறது என நம்புகிறோம்” என்றார்.