தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் சதம் அடித்தார். மேலும் அவர் 5 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்த நியூஸிலாந்து வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
ஹாமில்டன் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 314 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. குயிண்டன் டி காக் 90 ரன் எடுத்தார். மேட் ஹென்றி 4 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்தது. டாம் லதாம் 42, ஜீத் ராவல் 25 ரன்களுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். லதாம் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜீத் ராவலுடன் இணைந்த வில்லியம்சன் சிறப்பாக விளையாடி 151 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் தனது 17-வது சதத்தை அடித்தார்.
இதன் மூலம் அதிக சதங்கள் அடித்திருந்த சகநாட்டு வீரரான மார்ட்டின் குரோவ் (17) சாதனையை அவர் சமன் செய்தார். முன்னதாக வில்லியம்சன் 61 ரன்களை கடந்த போது டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 5 ஆயிரம் ரன்களை கடந்த நியூஸிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.
வில்லியம்சன் 110 இன்னிங்ஸ் களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதற்கு முன்னர் அந்நாட்டை சேர்ந்த மார்ட்டின் குரோவ் இந்த சாதனையை 177 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தி யிருந்தார். வில்லியம்சனுக்கு உறுதுணையாக விளையாடிய ஜீத் ராவல் 88 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 190 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய நீல்புரும் 12, ஹென்றி நிக்கோல்ஸ் 0 ரன்களில் நடையை கட்டினார்.
நேற்றைய ஆட்டத்தின் முடிவில் நியூஸிலாந்து அணி 104 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 148, மிட்செல் சான்ட்னர் 13 ரன்களுடன் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மோர்கல், ரபாடா ஆகியோர் தலா இரு விக்கெட்கள் கைப்பற்றினர்.