விளையாட்டு

ஷமியின் வேகப் புயலில் 234 ரன்களில் சுருண்டது மே.இ. தீவுகள்

செய்திப்பிரிவு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ்சில், மேற்கிந்திய தீவுகள் அணி 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மேற்கிந்திய தீவுகளில் குறைந்த ரன்களில் ஆட்டமிழப்பதற்கு, வேகப் பந்துவீச்சாளர் ஷமியின் அபாரப் பந்துவீச்சு உறுதுணை புரிந்தது. முகமது ஷமிக்கு இதுவே முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட் செய்தது.

துவக்க ஆட்டக்காரர்கள் கெய்ல் 18 ரன்களையும், பவல் 28 ரன்களையும் சேர்த்தனர். பிராவோ 23 ரன்கள் எடுத்தார். சாமுவேல்ஸ் நிதானமாக பேட் செய்து, 65 ரன்கள் எடுத்து, அணியின் ரன் எண்ணிக்கையை ஓரளவு கூட்டினார். அவருக்கு உறுதுணையாக இருந்த சந்திரபால் மிக நிதானமாக பேட் செய்து 36 ரன்களை எடுத்தார்.

ஆனால், மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். ரம்தீன் 4 ரன்களிலும், ஷம்மி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஷில்லிங்ஃபோர்டு 5 ரன்கள் எடுத்தார். பெர்மவுல் மற்றும் பெஸ்ட் ஆகியோர் தலா 14 ரன்கள் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் தனது முதல் இன்னிங்ஸ்சில், 78 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், ஓஜா மற்றும் சச்சின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தனது கடைசி தொடரை விளையாடிவரும் சச்சின் டெண்டுல்கர், தனது 199-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில், ஒரு விக்கெட்டை வீழ்த்தி, ரசிகர்களை ஆரவாரமிடச் செய்தார்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி நிதானமாக பேட் செய்யத் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில், 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 16 ரன்களுடனும், ஷிகார் தவாண் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

SCROLL FOR NEXT