விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் எழுச்சி எதிர்பார்த்ததுதான் என்று அவரது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறியதாவது:
நான் விராட் கோலியை எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியனாக வேண்டும் என்றே கருதினேன், வெறும் ஒருநாள் கிரிக்கெட் ஜாம்பவனாக மட்டும் அவர் முடிந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அவர் என்னை இந்த விதத்தில் ஏமாற்றவில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
2014 இங்கிலாந்து தொடரில் (ஆண்டர்சன் கோலியை சொல்லிச் சொல்லி அவுட் செய்ததொடர்) கோலி தன்னம்பிக்கை குறைவாகக் காணப்பட்டார். அவர் திணறிய போது உடனடியாக இங்கிலாந்து சென்று அவருக்கு ஆலோசனை வழங்க முடிவெடுத்தேன். ஆனால் முடியவில்லை, அதன் பிறகு அவர் கவனக்குவிப்பு அபாரமாக அமைய இப்போது அரிதான ஒரு டெஸ்ட் பேட்ஸ்மெனாக அவர் உயர்ந்துள்ளார்.
தனக்காக எந்த விதமான பிட்ச் காத்திருக்கிறது என்பது பற்றியெல்லாம் கவலைப்படாத ஒரு அரிய வீரர் விராட்.
எதிரணியினர் எங்கு வீசுவர் என்பதை அவர் கண்முன் கொண்டு வந்து பார்க்கிறார், அதனை எப்படி ஆட வேண்டும் என்பதையும் கண்முன் கொண்டு வருகிறார். இவையெல்லாம் ஈடுபாடு இல்லாமல் வராது. அவர் எப்போதும் ஒரு படி மேலே. என்னுடைய ஆலோசனைக்குப் பிறகு இறங்கியவுடன் கட், புல் ஆடுவதை அவர் குறைத்துள்ளார்.
ஆனாலும் இன்னும் சில பகுதிகளில் அவர் முன்னேற வேண்டும். ஆஸ்திரேலியா தொடர் மிகப்பெரிய தொடர், விராட் முழு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் வீரரைச் சிக்கலாக்குவதில் ஆஸ்திரேலியர்கள் நிபுணர்கள். ஆனால் அவர்களுக்காக கோலி காத்திருக்கிறார் என்பதை நான் அறிவேன்..
இவ்வாறு கூறினார் ராஜ்குமார் சர்மா.
விராட் கோலி சமீபத்தில் ‘நான் அச்சப்படும் ஒரே நபர் என் பயிற்சியாளர்தான்’ என்று கூறியது நினைவுகூரத்தக்கது.