சாக்ஷி மாலிக்கின் வெண்கலம், பி.வி. சிந்துவின் வெள்ளி என உற்சாகத்தில் இருந்த ஒட்டுமொத்த தேசத்தையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது நர்சிங் யாதவுக்கு விதிக்கப்பட்டுள்ள 4 ஆண்டு தண்டனை.
ஆம், ஒருபக்கம் ஒலிம்பிக் மகளிர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, உலக தரவரிசையில் 6-ம் இடத்தில் உள்ள ஜப்பானின் நஜோமி ஓகுஹாராவை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது.
மறுபக்கம், இந்தியாவுக்கு நிச்சயம் பதக்கம் வென்றெடுப்பார் என்ற நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த நர்சிங் யாதவ் மீதான தடை பேரதிர்ச்சியாக இறங்கியுள்ளது.
இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் இந்த சர்ச்சையை விசாரித்து அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. ஆனால் தற்போது சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு முகமையின் மேல்முறையீட்டை அடுத்து தற்போது நர்சிங் யாதவ் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றப்பட்டடார். இதோடு, அவர் விளையாட 4 வருடங்கள் தடையும் போடப்பட்டுள்ளது. ஊக்க மருந்து தன்னுடைய உணவில் தனக்கே தெரியாமல் கலக்கப்பட்டது என்ற நர்சிங் யாதவ் கூறியிருந்தாலும் அதற்கு சாட்சி இல்லை என்பதால், அவரது வாதம் எடுபடாமல் போனது.
ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும், ஒரு வெண்கலப் பதக்கத்துக்குக் கூட போராடும் இந்தியாவுக்கு, இந்த மாதிரியான சர்ச்சைகள் எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தும்? உங்கள் கருத்துகளை பகிருங்கள்.