விளையாட்டு

அல்ஹசனுக்கு 3 போட்டிகளில் தடை

செய்திப்பிரிவு

வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசனுக்கு 3 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனால் இலங்கையுடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்த அல்ஹசன், வரும் 25-ம் தேதி தொடங்கவுள்ள ஆசிய கோப்பை போட்டியின் முதல் இரு ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அல்ஹசன் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வெளியேறிய அவர் மைதானத்தின் “பால்கனி” பகுதியில் சகவீரர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சியின் கேமராமேன் தனது கேமராவை வீரர்களுக்கு மிக அருகில் கொண்டு சென்று அவர்களை தொலைக்காட்சியில் காண்பித்துள்ளார். அதனால் கோபமடைந்த அல்ஹசன், கேமராவைப் பார்த்து அருவருக்கத்தக்க வகையில் சில செய்கைகளை காண்பித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்ட வங்கதேச கிரிக்கெட் வாரியம், அல்ஹசனுக்கு 3 போட்டிகளில் விளையாட தடை விதித்ததோடு, ரூ.2 லட்சம் அபராதமும் விதித்தது.

SCROLL FOR NEXT