துபையில் நடைபெற்று வரும் துபை டென்னிஸ் சாம்பியன் ஷிப்பில் சுவிட்சர்லாந்தின் முன் னணி வீரரான வாவ்ரிங்கா முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி யடைந்தார். உலகத் தரவரிசையில் 3-ம் நிலை வீரரான அவர் 6-7, 3-6 என்ற நேர் செட்டில் போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா நாட்டை சேர்ந்த 77-ம் நிலை வீரரான டமிர் தும்குரிடம் வீழ்ந்தார்.
மெக்சிகோவின் அக்அபுல்கோ நகரில் நடைபெற்று வரும் ஏடிபி டென்னிஸ் தொடரில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயின் ரபேல் நடால் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
ஜோகோவிச் தனது முதல் சுற்றில் 6-3, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் சுலோவேக்கியாவின் மார்ட்டின் கிளிஸானையும், ரபேல் நடால் 6-4, 6-3 என்ற கணக்கில் ஜெர்மனியின் மிஸ்ஷா ஜிவெர்வையும் வீழ்த்தினர்.
29 வயதில் ஓய்வு
இஸ்ரேல் டென்னிஸ் வீராங்கனையான ஷாகர் பியர், தோள்பட்டை காயம் காரணமாக 29 வயதிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுரை அவர் டபிள்யூடிஏ அரங்கில் 5 பட்டங்கள் வென்றுள்ளார். கடந்த 2007-ல் ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபனில் கால் இறுதி சுற்று வரை முன்னேறினார்.
இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் கால் இறுதிக்கு முன்னேறிய முதல் இஸ்ரேல் வீராங்கனை என்ற சாதனையை படைத்திருந்தார். கடந்த 2011-ல் தரவரிசையில் 11-வது இடத்தை பிடித்தார். கடைசியாக கடந்த ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றார். அதன் பின்னர் தோள்பட்டை காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் ஷகார் பியர் தனது முகநூல் பக்கத்தில், “கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தோள் பட்டை காயத்தால் அவதிப்பட்டு வருகிறேன். காயத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் 13 ஆண்டு கால டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி’’ என தெரிவித்துள்ளார்.