விளையாட்டு

டெல்ரே பீச் ஓபன்:காலிறுதியில் ஜான் இஸ்னர், காயத்தால் விலகினார் நிஷிகோரி

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் டெல்ரே பீச் நகரில் நடைபெற்று வரும் டெல்ரே பீச் ஓபன் டென்னிஸ் போட்டியில் அந்நாட்டு வீரர் ஜான் இஸ்னர் காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது வலது கணுக்கால் காயம் காரணமாக முதல் போட்டியோடு வெளியேறிய ஜான் இஸ்னர், அதன்பிறகு இந்தப் போட்டியில்தான் பங்கேற்றுள்ளார். இதில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இஸ்னர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இஸ்ரேலின் டூடி செலாவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 3-6 என்ற கணக்கில் டூடி செலாவிடம் இழந்த ஜான் இஸ்னர், அதன்பிறகு அபாரமாக ஆடி அடுத்த இரு செட்களையும் 6-1, 7-6 (5) என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியை வெற்றியில் முடித்தார். இஸ்னர் தனது காலிறுதியில் சகநாட்டு தகுதிச்சுற்று வீரரான ரியான் வில்லியம்ஸை சந்திக்கிறார். வில்லியம்ஸ் 6-7 (7) 6-4, 6-2 என்ற செட் கணக்கில் சைப்ரஸ் வீரரான மார்கஸ் பாக்தாதிஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

நிஷிகோரிக்கு காயம்

போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளவரான ஜப்பானின் கெய் நிஷிகோரி, இடது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். நிஷிகோரி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் டெய்முரஸ் கேபாஸ்விளியை எதிர்கொண்டார். டெய்முரஸ் 4-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது நிஷிகோரி விலகினார். இதனால் இந்தப் போட்டி 18 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது.

கடந்த வாரம் மெம்பிஸ் போட்டியில் பட்டம் வென்று தனது 4-வது ஏடிபி பட்டத்தைக் கைப்பற்றிய நிஷிகோரி காயம் குறித்துப் பேசுகையில், “எனது முதல் போட்டிக்கு முன்னதாகவும் இதேபோன்று வலி ஏற்பட்டது. எனினும் அதோடு விளையாடினேன். ஆனால் இன்றைய போட்டியில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனது உடல்தகுதி நன்றாக இல்லை. நான் காயத்திலிருந்து முழுமையாக மீள்வதற்கு கொஞ்ச நாள்கள் ஆகும்” என்றார்.

டெய்முரஸ் தனது காலிறுதிச்சுற்றில் குரேஷியாவின் மரின் சிலிச்சை சந்திக்கிறார். சிலிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ரியான் ஹாரிசனை தோற்கடித்து காலிறுதியை உறுதி செய்தார்.

வெற்றி குறித்து மரின் சிலிச் பேசுகையில், “இது மற்றொரு சிறந்த வெற்றி. இந்த வெற்றி எளிதாகக் கிடைத்ததல்ல. ஏனெனில் அதிக அளவில் காற்று வீசியது. ஆனால் சரியான இடத்தில் பந்தை அடித்தேன். முக்கியமான கட்டத்தில் எனது சர்வீஸ் நன்றாக எடுபட்டதாக நினைக்கிறேன். அது எப்போதுமே மிக முக்கியமானதாகும்” என்றார்.

SCROLL FOR NEXT