விளையாட்டு

டெல்லி ஓபன்: சோம்தேவ் சாம்பியன்

செய்திப்பிரிவு

டெல்லி ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் சாம்பியன் பட்டம் வென்றார். இது சோம்தேவ் வென்ற 3-வது சேலஞ்சர் பட்டமாகும்.

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் சோம்தேவ் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த உக்ரைனின் அலெக்சாண்டர் நீடோயெசாவை தோற்கடித்தார்.

4-வது சேலஞ்சர் இறுதிப் போட்டியில் விளையாடிய சோம்தேவ் 59 நிமிடங்களில் போட்டியை முடித்து 3-வது பட்டத்தைக் கைப்பற்றினார். இதற்கு முன்னர் 2010-ல் துருக்கியில் நடைபெற்ற போட்டியிலும், 2008-ல் அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியிலும் அவர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

வெற்றி குறித்துப் பேசிய சோம்தேவ், “அலெக்சாண்டர் சிறந்த வீரர். போட்டியின் ஆரம்பத்தில் அவர் கடும் சவால் அளித்தார். ஆனால் ஆட்டம் போகப்போக அவர் தடுமாறினார். இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளில் அவர் வெற்றிகளைக் குவிக்க எனது வாழ்த்துகள். இந்தப் போட்டியைக் கண்டுகளிப்பதற்காக இங்கு வந்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு பேர் இங்கு வந்திருப்பதை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT