விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் இன்று தொடக்கம்: அசத்தும் முனைப்பில் இந்திய நட்சத்திரங்கள்

பிடிஐ

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடர் சிட்னியில் இன்று தகுதி சுற்று ஆட்டங்களுடன் தொடங்கு கிறது. வரும் 25-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் சாய்னா நெவால், இந்தோனேஷிய பாட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவில் பட்டம் வென்ற கிடாம்பி காந்த் உள்ளிட் டோர் கலந்து கொள்கின்றனர்.

அடுத்தடுத்து இரு இறுதிப் போட்டிகளில் விளையாடி உள்ள காந்த், தனது முதல் சுற்றில், தகுதி சுற்றில் வெற்றி பெறும் வீரருடன் நாளை மோதுகிறார். இந்த தொடர் குறித்து காந்த் கூறும்போது, “ உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக நடைபெறும் கடைசி தொடராக ஆஸ்திரேலிய ஓபன் அமைந்துள்ளது. இந்த தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.

இந்தோனேஷிய ஓபனில் பட்டம் வென்றது பெரிய அளவிலான நம்பிக்கையும், ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. ஆஸ்திரேலிய ஓபனில் 100 சதவீத திறமையையும் வெளிப்படுத்துவேன். என்னிடம் இருந்து மேலும் சிறந்த திறன் வெளிப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

இந்தோனேஷிய ஓபனில் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற லீ சோங் வெய், ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஷென் லாங் ஆகியோரை வீழ்த்தி அபார திறனை வெளிப்படுத்திய மற்றொரு இந்திய வீரரான பிரணாய் மீதும் ஆஸ்திரேலிய ஓபனில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

பிரணாய் தனது தகுதி சுற்றில் இன்று ஜப்பானின் கஸூமசா சகாயை எதிர்த்து விளையாடுகிறார். இந்தோனேஷிய ஓபன் அரை இறுதியில் சகாயிடம் பிரணாய் தோல்வியடைந்திருந்தார். இந்த தோல்விக்கு பிரணாய் பழிதீர்க்கும் வகையில் சிறந்த திறனை வெளிப்படுத்த முயற்சிப்பார் என கருதப்படுகிறது.

ஆடவர் பிரிவில் இவர்கள் இருவருடன் கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் ஓபனில் பட்டம் வென்ற மற்றொரு இந்திய நட்சத்திர வீரரான ஷாய் பிரணீத் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.

24 வயதான ஷாய் பிரணீத், இந்தோனேஷிய ஓபனில் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டிருந் தார். ஆஸ்திரேலிய ஓபனில் அவர் தனது முதல் சுற்றில் இந்தோனேஷி யாவின் டாமி சுகியோர்தோவுடன் மோதுகிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நெவால், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து ஆகியோருக்கு முதல் சுற்றிலேயே கடும் சவால் காத்திருக்கிறது.

சாய்னா தனது முதல் சுற்றில் கொரியாவின் சுங் ஜி ஹைனை எதிர்த்து விளையாடுகிறார். சுங் ஜி ஹைன், இந்தோனேஷிய ஓபனில் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில், இந்தோனேஷிய ஓபனில் பட்டம் வென்ற ஜப்பானின் சயகா சடோவை சந்திக்கிறார். சாய்னா, சிந்து ஆகியோர் இந்தோனேஷிய ஓபனில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றோடு வெளியேறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர வீரர், வீராங்கனை களான இவர்களுடன் சையது மோடி கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு தொடரில் பட்டம் வென்ற சமீர் வர்மா, அஜெய் ஜெயராம் ஆகியோரும் இந்த தொடரில் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். சமீர் வர்மா தனது முதல் சுற்றில் சீன தைபேவின் ஸூ வேய் வாங்கையும், அஜெய் ஜெயராம் தனது முதல் சுற்றில் ஹாங் காங்கின் லாங் அங்குஸையும் எதிர்கொள்கின்றனர்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி தங்களது முதல் சுற்றில் ஜப்பானின் 3-ம் நிலை ஜோடியான தாக்ஷி கமுரா, கெய்கோ சோனோடாவுடன் மோதுகிறது. இந்தியாவின் இளம் ஜோடியான சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி தங்களது முதல் சுற்றில் ஹாங் காங்கின் லா சவுக் ஹிம், லீ சூன் ஹே ரெஜினால்ட் ஜோடியை எதிர்த்து விளையாடுகிறது.

SCROLL FOR NEXT