முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வரும் செப்டம்பர் மாதத்துடன் ஓய்வு பெறப் போவதாக இலங்கையின் முன்னாள் வீரரான சங்கக்கரா அறிவித்துள்ளார்.
39 வயதான அவர் தற்போது இங்கிலாந்தின் கவுன்டி அணியான சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் அந்த அணி செப்டம்பர் மாதத்துடன் போட்டிகளை நிறைவு செய்கிறது. முதல்தர போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் 2018-ம் ஆண்டு வரை தொழில்முறை டி20 போட்டிகளில் விளையாடுவேன் என சங்கக்கரா தெரிவித்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து சங்கக்கரா கடந்த 2015-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். 134 டெஸ்ட்டில் விளையாடி உள்ள அவர் 11 இரட்டை சதங்களுடன் 12,400 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள இவரது சராசரி 57 ஆகும்.
2014-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியிலும் சங்கக்கரா இடம் பெற்றிருந்தார். மேலும் 2007, 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய இலங்கை அணியிலும் சங்கக்கரா பங்கேற்றிருந்தார்.
2015-ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு சர்ரே அணிக்காக விளையாடத் தொடங்கினார். இந்த சீசனில் அவர் இரு சதங்கள் அடித்துள்ளர்.