விளையாட்டு

ஸ்டெபி கிராபின் சாதனை முறியடிப்பு: 23-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் செரீனா - உலக டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடம்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் தனது மூத்த சதோரியான வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்.

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வதற்கான இறுதிப் போட்டியில் நேற்று 2-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தனது மூத்த சகோதரியும் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ளவருமான வீனஸ் வில்லியம்ஸை எதிர்த்து விளையாடினார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்ற செரீனா வில்லியம்ஸ் 7-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார்.

பட்டம் வென்றதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அதிக பட்டங்கள் வென்றவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த ஜெர்மனியின் ஸ்டெபி கிராப் சாதனையை (22 பட்டங்கள்) செரீனா முறியடித்தார். 35 வயதான செரீனா இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார்.

இந்த வகை சாதனையில் ஆஸ்திரேலியாவின் மார்கரேட் கோர்ட் முதலிடத்தில் உள்ளார். அவர் மொத்தம் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு அடுத்த இடத்தில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் செரீனா உள்ளார்.

23 பட்டங்கள் வென்று சாதனை படைத்துள்ள செரீனா, கடந்த ஆண்டு இழந்த நம்பர் ஒன் இடத்தை மீண்டும் பெற்றுள்ளார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக நம்பர் ஒன் இடத்தில் இருந்த செரீனா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரிடம் முதலிடத்தை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செரீனா வில்லியம்ஸ் வென்றுள்ள 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களில், 7 ஆஸ்திரேலிய ஓபன், 3 பிரெஞ்சு ஓபன், 7 விம்பிள்டன், 6 அமெரிக்க ஓபன் பட்டங்கள் அடங்கும். வெற்றி குறித்து செரீனா கூறும்போது, “இந்த தருணத்தில் வீனஸூக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஒரு அற்புதமான மனிதர். அவர் இல்லாமல் நான் 23 பட்டங்களை வென்றிருக்க முடியாது.

நம்பர் ஒன் இடத்தையும் அவர் இல்லாமல் என்னால் பெற்றிருக்க முடியாது. வீனஸ்தான் எனது உத்வேகம். நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு அவர் மட்டும்தான் காரணம். மேலும் நாங்கள் சகோதரிகளாக நிற்பதற்கும் அதுதான் காரணம்’’ என்றார்.

வீனஸ் வில்லியம்ஸ் கூறும் போது, “செரீனா வில்லியம்ஸ். எனது இளைய சகோதரி. 23-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற அவரை பாராட்டுகிறேன். சரியான நேரத்தில் நான் உன்னோடு இருக்கிறேன். உனக்கு எதிராக இருந்த பலரை நான் இழந்துள்ளேன்.

அது வித்தியாசமானதுதான். ஆனால் உண்மை. உன்னுடைய வெற்றி எப்போதுமே என்னுடைய வெற்றி. இது உனக்கும் நன்கு தெரியும். நீ வெற்றி பெற்ற சிலதருணங்கள் ஆனால் இங்கு இருந்ததில்லை. இந்த பரிசை பெற்றதும் இல்லை. ஆனால் நீ இருந்திருக்கிறாய். உன்னை நினைக்கும்போது பெருமையாக உள்ளது’’ என்றார்.

சாம்பியன் பட்டம் வென்ற செரீனாவுக்கு கோப்பையுடன் ரூ.19 கோடி பரிசுத்தொகை வழங்கப் பட்டது. 2-வது இடம் பிடித்த வீனஸ் ரூ.9.75 கோடி பரிசுத்தொகையை பெற்றார்.

பெடரர் இன்று மோதல்

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபேல் நடால், 17-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடர ருடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

நடால் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களும், பெடரர் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களும் வென்றுள் ளனர். நடால், 2009-ல் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றிருந்தார். அவர் வென்ற ஒரே ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் இதுதான். மாறாக பெடரர் 4 முறை ஆஸ்திரேலிய ஓபனில் மகுடம் சூடி உள்ளார்.

இருவரும் கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டிகளில் 8 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் நடால் 6 முறையும், பெடரர் இரண்டு முறையும் பட்டம் வென்றுள்ளனர். இருவரும் கடைசியாக மோதிய 4 ஆட்டங் களிலும் நடாலே வெற்றி வாகை சூடியுள்ளார்.

SCROLL FOR NEXT