எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.
270 ரன்கள் எடுப்பார்கள் என்று கணிக்கப்பட்டது, அதற்கு 6 ரன்கள் குறைவாகவே எடுத்துள்ளனர்.
கடைசியில் மஷ்ரபே மோர்டசாவை கொஞ்சம் அதிகமாகவே அடிக்கவிட்டார்கள் என்றே கூற வேண்டும், பெரும்பாலும் கோமாளித்தனமாக ஆடிய அவர் அதிர்ஷ்டவசமாகவே ஓரிரு பவுண்டரிகளை அடித்தார். இல்லையெனில் 20 ரன்கள் குறைவாகவே வங்கதேசத்தை மடக்கியிருக்கலாம். ஆனால் ஒன்றேயொன்று வங்கதேச அணி முழுதும் பாசிட்டிவாக ஆடினர் என்றே கூற வேண்டும். பும்ரா கடைசி 2 ஓவர்களில் ரன்களைக் கொடுத்தாலும் பெரும்பாலும் அருமையாக வீசினார். அதே போல்தான் புவனேஷ் குமாரும் நன்றாகவே வீசினார்.
பும்ரா 39 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், குமார் 10 ஒவர்கள் 53 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அஸ்வின் 10 ஓவர்கள் 54 ரன்கள் சோபிக்கவில்லை அவருக்கு ஒருவேளை பந்து சரியாக கிரிப் செய்ய முடியாமல் போயிருக்கலாம். கேதர் ஜாதவ்தான் இன்று திருப்பு முனை ஏற்படுத்திய பவுலர் என்று கூற வேண்டும், தமிம் இக்பால் மிகவும் அபாயகரமாக பேட் செய்து கொண்டிருந்த போது அவரை 70 ரன்களில் பவுல்டு செய்ததோடு, மற்றொரு அரைசத நாயகன் முஷ்பிகுர் ரஹீமையும் தாழ்வான புல்டாஸில் வீழ்த்தினார். அந்த இரண்டு விக்கெட்டுகள் நிச்சயம் வங்கதேசத்துக்கு சற்றே பின்னடைவை ஏற்படுத்தியது. கேதார் ஜாதவ் 6 ஓவர்களில் 18 டாட் பால்களுடன் ஒரு பவுண்டரியை மட்டுமே கொடுத்து 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஷாகிப் அல் ஹசனையும் தோனியின் அருமையான கேட்சுக்கு ஜடேஜா வீழ்த்த வங்கதேசம் 35.2 ஓவர்களில் 184/5 என்று இருந்தது, அதன் பிறகு இந்தியா இன்னும் கொஞ்சம் தீவிரம் காட்டியிருந்தால் வங்கதேசத்தை 225-230 ரன்களுக்கு மடித்திருக்க முடியும், ஆனால் மஹ்முதுல்லாவுக்கு அஸ்வின் கேட்சை விட்டார். மேலும் இந்த இடத்தில் அஸ்வின் பந்து வீச்சு கைகொடுத்திருந்தால் இன்னும் முன்னமேயே வங்கதேசத்தை முடக்கியிருக்க முடியும்.
ஹர்திக் பாண்டியா இன்னமும் இந்த மட்டத்தில் பந்து வீச தயாராகவில்லை என்பது இன்னொரு முறை நிரூபணமானது, நோபால்கள் வைடுகள், என்று அவர் சில பல இலவச பந்துகளை வீசி 4 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக் கொடுத்தார், இன்னிங்சின் ஒரே சிக்சரையும் பாண்டியாதான் கொடுத்தார், இறங்கி வந்த தமீம் இக்பால் மிக அழகாக அதனை மிட்விக்கெட் திசையில் தூக்கி அடித்தது ஒரே சிக்சராக அமைந்தது. ஆனால் இதற்கிடையே நோ-பாலில் தமீமை பவுல்டு செய்தார் பாண்டியா ஆனால் என்ன பயன்? இங்குதான் ஒரு கேப்டனுக்கு பேட்ஸ்மென்கள் மீது நம்பிக்கை வேண்டும் என்று கூற வேண்டியுள்ளது, ஒருவேளை பாண்டியா இடத்தில் மொகமது ஷமி இருந்திருந்தால்... என்ற கேள்வி பதிலின்றி தொங்கிக் கொண்டேயிருக்கிறது.
தொடக்கத்தில் சவுமியா சர்க்கார் புவனேஷ் குமார் பந்தை கால்களை நகர்த்தாமல் ஆட முயன்று மட்டையின் உள்விளிம்பில் பட்டு முதல் ஓவரிலேயே பவுல்டு ஆனார். சபீர் ரஹ்மான் இறங்கி அட்டகாசமாக ஆடி 21 பந்துகளில் 4 பவுண்டரிகளை அடித்தார், புவனேஷ் குமாரை மேலேறி வந்து இரண்டு பவுண்டரிகளை விளாசி ஆக்ரோஷம் காட்டினார். ஆனால் புவனேஷ் குமார் சாதுரியமான ஷார்ட் பிட்ச் பவுலிங் மூலம் அவரைக் கட்டுப்படுத்த 13 பந்துகளில் ரன்களே வரவில்லை, இதனால் அழுத்தம் அதிகரிக்க ஒரு பந்தை ஜடேஜா கையில் நேரே அடித்து வெளியேறினார். இதற்கு முன்னதாக சபீர் ரஹ்மானின் இந்தியாவுக்கு எதிரான பேட்டிங் சராசரி 50.33 என்பது குறிப்பிடத்தக்கது.
தமிம் இக்பால் முதல் 49 பந்துகளில் 26 ரன்களையே எடுத்து திணறி வந்தார். ஆனால் ஹர்திக் பாண்டியா, அஸ்வின் பந்து வீச்சு சரியாக அமையாததால் அடுத்த 13 பந்துகளில் மேலும் 24 ரன்களை விளாசி தமிம் இக்பால் 62 பந்துகளில் அரைசதம் எட்டினார்.
முஷ்பிகுர் ரஹிம் ஜடேஜாவை ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரியுடன் வரவேற்றார், தமீம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்காக சுமார் 21 ஓவர்களில் 123 ரன்கள் என்ற முக்கியக் கூட்டணி அமைத்தனர்.
ஆனாலும் திடீரென 4 டாட் பால்களை ஜாதவ் வீச அழுத்தமடைந்த தமீம் இக்பால் ஸ்லாக் ஸ்வீப் ஆட முயல பவுல்டு ஆனார். ஷாகிப் அல் ஹசன் 23 பந்துகளில் 15 ரன்களையே எடுத்து ஜடேஜாவை கட் செய்ய முயன்று தோனியின் ஷார்ப் கேட்சுக்கு வெளியேற, 36-வது ஓவரில் முஷ்பிகுர் ரஹிம் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஜாதவ்வின் புல்டாஸை நேராக் கோலி கையில் அடித்து வெளியேறினார். ஜாதவ்வை அறிமுகம் செய்த பிறகு சுமார் 10 ஓவர்களில் வங்கதேசம் 37 ரன்களையே எடுத்து அதில் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.
கடைசி 10 ஒவர்களில் பும்ரா பந்தின் தையல் பட்டு தெறிக்குமாறு வீசி மொசாடக் ஹுசைனை ஷார்ட் பிட்ச் பந்தில் வீழ்த்தினார். பிறகு யார்க்கரில் மஹமுதுல்லாவை பவுல்டு செய்தார்.
கடைசியில் மோர்டசா சில அதிர்ஷ்ட பவுண்டரிகள் மூலம் 30 ரன்களை எடுக்க வங்கதேசம் 264 ரன்களை எடுத்தது, இது ஓரளவுக்கு நல்ல ஸ்கோரே.