2008-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டபோது அதற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்புக்கு அளவேயில்லை என்று சொல்லலாம். வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு, உற்சாகம், கொண்டாட்டம் என கோலோச்சிய ஐபிஎல் போட்டி அடுத்தடுத்த ஆண்டுகளில் அபார வளர்ச்சி பெற்று விளையாட்டு உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
அதை பின்பற்றி வெளிநாடுகளிலும் டி20 போட்டிகள் நடக்க ஆரம்பித்தன. படுவேகத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ஐபிஎல் அதேவேகத்தில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஐபிஎல் அணிகளில் மிகச்சிறந்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸை (சி.எஸ்.கே.) வைத்திருக்கும் சீனிவாசன், அந்த அணியின் வடிவிலும், தனது மருமகன் குருநாத் மெய்யப்பன் மூலமாகவும் தனக்கு இவ்வளவு பெரிய சோதனை வரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
ஐபிஎல் போட்டியின் காரணகர்த் தாவான லலித் மோடி இரண்டே ஆண்டுகளில் ஊழல் காரணமாக ஓரம்கட்டப்பட்ட நிலையில், 2013 ஐபிஎல் போட்டியில் நிகழ்ந்த ஐபிஎல் சூதாட்டம், ஸ்பாட் ஃபிக்ஸிங் ஊழல்கள் சீனிவாசனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தின. அவர் பதவி விலக வேண்டும் என்று ஏகோபித்த குரல்கள் ஒலித்தன. ஆனாலும் எதற்கும் அஞ்சவில்லை சீனிவாசன். அதேநேரத்தில் பிசிசிஐ கூட்டங்களில் சீனிவாசனுக்கு எதிராக பேசுவதற்கு பிசிசிஐ நிர்வாகிகள் அஞ்சினர்.
ஆனால் பிஹார் கிரிக்கெட் சங்கத்தின் தொடர் போராட்டம் ஐபிஎல் சூதாட்ட வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்தின் படிகளில் ஏற்றியது. அது பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றபோது சீனிவாசன் தனது பிசிசிஐ தலைவர் பதவியை இழக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அப்போதும் போராடிப் பார்த்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் விடாப்பிடியாக இருந்த உச்ச நீதிமன்றம், பிசிசிஐ தலைவர் பதவி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே வைத்துக் கொள்ள முடியும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தக்கவைத்துக் கொள்வதற்காக பிசிசிஐ தலைவர் பதவியை உதறினார். ஆனால் இப்போது அந்த அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளார் சீனிவாசன்.
வாழ்நாள் தடையை எதிர் கொண்டுள்ள குருநாத் மெய்யப் பனோ இனி கிரிக்கெட் தொடர்பான எந்த செயல்களிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தண்டனை விவரத்தை வாசித்த ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி லோதா, “குருநாத் மெய்யப்பன் தவறிழைத்தது நிரூபணமாகி யுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உறுப்பினராக இருந்துள்ள அவர், சூதாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியுள்ளார்.
அவர் கிரிக்கெட் மீது ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை ஏற்பது கடினமாக இருக்கிறது. அவர் சூதாட்டத்தின் மூலம் ரூ.60 லட்சத்தை இழந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் மெய்யப் பனின் மரியாதைக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாகக் கருதினாலும், கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தோடு ஒப்பிடும்போது அது மிகவும் குறைவே. அதனால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். நீதிபதியின் அதிரடி உத்தரவுகள், சீனிவாசனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில் ஐபிஎல் போட்டியை அதிரவைத்துள்ளது சூதாட்டம் என்று சொல்லக்கூடிய இந்த ‘பெட்டிங் பால்’.
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு விரைவில் கூடுகிறது.
இது தொடர்பாக ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “விரைவில் ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவின் அவசரக்கூட்டம் கூட்டப்படும். அந்தக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்படும். தீர்ப்பு நகல் வந்த பிறகு சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவெடுக்கப்படும்” என்றார்.
இரு அணிகள் தடை செய்யப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக இரு புதிய அணிகளை அனுமதிக்கலாமா அல்லது இரு அணிகளின் வீரர்களை மட்டுமே ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வைக்கலாமா அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளை வேறு நிறுவனங் களுக்கு விற்பனை செய்ய வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
விசாரணை கடந்து வந்த பாதை
மே 16, 2013
சூதாட்ட தரகர்களிடம் உறுதியளித்தபடி 6-வது ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக மோசடி குற்றச்சாட்டின் கீழ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி் வீரர்கள்
ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டிலா ஆகியோரை டெல்லி போலீஸ் கைது செய்தது. இது தவிர 11 சூதாட்ட தரகர்களும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 3 கிரிக்கெட் வீரர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது பிசிசிஐ. அவர்கள் 3 பேரும் பின்னர் ஜாமீனில் விடுதலையாகினர்.
மே 23, 2013
ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான விசார ணைக்கு ஆஜராகுமாறு பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய நபருமான குருநாத் மெய்யப்பனுக்கு மும்பை போலீஸ் நோட்டீஸ் அனுப்பியது.
மே 24, 2013
மோசடி செய்தது, ஏமாற்றியது உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார்.
மே 25, 2013
குருநாத் மெய்யப்பன் வழக்கில் நேர்மை யான மற்றும் நியாயமான விசாரணையை பிசிசிஐ நடத்தும் என பிசிசிஐ தலைவர் சீனிவாசன் அறிவித்தார். குருநாத் மெய்யப்பன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரோ, தலைமைச் செயல் அதிகாரியோ அல்லது அணியின் முதல்வரோ அல்ல என அந்த அணியின் உரிமையாளரான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
மே 28, 2013
இந்தியா சிமென்ட்ஸ், குருநாத் மெய் யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரான ஜெய்ப்பூர் ஐபிஎல் தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு. ஆனால் இந்த குழு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்ததைத் தொடர்ந்து, ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் அந்தர் பல்டி அடித்தனர். விசாரணைக்குழு எங்கே, எப்போது அமைக்கப்பட்டது என தங்களுக்கு தெரியாது என்றனர்.
ஜூன் 6, 2013
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக டெல்லி காவல் துறை ஆணையர் நீரஜ் குமார் தெரிவித் தார். இதையடுத்து ராஜ் குந்த்ராவை சஸ்பெண்ட் செய்தது பிசிசிஐ.
ஜூன் 28, 2013
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் உரிமையாளர்கள் மீதான சூதாட்ட புகார் குறித்து விசாரிக்க பிசிசிஐயால் அமைக்கப்பட்ட இரு நபர் கமிட்டி, குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகிய இருவரும் தவறிழைத் ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என அறிவித்தது.
ஜூன் 30, 2013
பிஹார் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் பிசிசிஐயால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு சட்டவிரோதமானது. அந்தக் குழுவால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களில் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது என அறிவித்தது.
ஆகஸ்ட் 30, 2013
மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் சீனிவாசன், பிசிசிஐ, இந்தியா சிமென்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது உச்ச நீதிமன்றம்.
செப்டம்பர் 13, 2013
ஸ்ரீசாந்த், அங்கித் சவாண் ஆகியோர் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது பிசிசிஐ. அதேநேரத்தில் சாண்டிலா விஷயத்தில் இறுதி முடிவெடுக்கப்பட வில்லை.
செப்டம்பர் 21, 2013
ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக மும்பை போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரி கையில் குருநாத் மெய்யப்பன் பெயர் இடம்பெற்றது. அதில் மோசடி செய்தது, ஏமாற்றியது, கிரிமினல் சதி உள்ளிட்ட பிரிவுகளில் குருநாத் மெய்யப்பன் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
அக்டோபர் 8, 2013
ஐபிஎல் முறைகேடு தொடர்பாக சுதந்திர மான விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி முத்கல் தலைமை யிலான 3 பேர் குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம். இதில் முத்கல் தவிர, மூத்த வழக்கறிஞரும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான நாகேஸ்வர ராவ், அசாம் கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த நிலாய் தத்தா ஆகியோரும் இடம்பெற்றனர். விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய இந்த கமிட்டிக்கு 4 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
பிப்ரவரி 10, 2014
முத்கல் கமிட்டி தாக்கல் செய்த முதல் அறிக்கையில் குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவித்திருந்தது. 2013 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது அணி குறித்த பல்வேறு தகவல்களை குருநாத் மெய்யப்பன் கசியவிட்டதாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உறுப்பினராக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதேபோல் சில வீரர்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் பெயர் வெளியிடப்படவில்லை.
மார்ச் 25, 2014
ஐபிஎல் ஊழல் விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெறுவதற்கு பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மார்ச் 27, 2014
சீனிவாசனுக்கு பதிலாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரை பிசிசிஐ தலை வராக நியமிக்கலாம் என ஆலோசனை வழங்கிய உச்ச நீதிமன்றம், சீனிவாச னுக்கு சொந்தமான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் நிர்வகித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டி யிருந்து நீக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்தது. அதைத் தொடர்ந்து பிசிசிஐ இடைக்கால தலைவராக மார்ச் 28-ம் தேதி கவாஸ்கர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மே 16, 2014
ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆதாரங்கள் குறித்து சோதனை நடத்தவும், அவற்றை பறிமுதல் செய்யவும் முத்கல் கமிட்டிக்கு அதிகாரம் வழங்கிய உச்ச நீதிமன்றம், வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.
நவம்பர் 14, 2014
முத்கல் கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில் சீனிவாசன், ஐபிஎல் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் ராமன், குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் பெயர் இடம் பெற்றிருப்பதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், ஐபிஎல் போட்டியில் பல்வேறு தவறுகள் நடந்திருப்பதாகவும் குறிப்பிட்டது.
நவம்பர் 17, 2014
முத்கல் கமிட்டியின் அறிக்கையில் சீனிவாசனுக்கு சூதாட்டத்திலோ, ஸ்பாட் ஃபிக்ஸிங்கிலோ தொடர்பு இல்லை. ஐபிஎல் சூதாட்ட வழக்கு விசாரணையை தடுக்கவும் முயற்சிக்கவில்லை. அதேநேரத்தில் வீரர்கள் விதிமுறைகளை மீறியது தெரிந்தபோதும் சீனிவாசன் உள்ளிட்ட 4 முக்கிய நிர்வாகிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஜனவரி 22, 2015
ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆகியோருக்கு என்ன தண்டனை வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காக ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி லோதா தலைமையில் குழு அமைத்தது உச்ச நீதிமன்றம்.
ஜூலை 14, 2015
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தலா 2 ஆண்டுகளும், குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு வாழ்நாள் தடையும் விதித்து லோதா கமிட்டி உத்தரவிட்டுள்ளது.