விளையாட்டு

யு-19 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்கா சாம்பியன்

செய்திப்பிரிவு

19 வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி முதல்முறையாக சாம்பியன் ஆனது.

துபையில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 44.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணியில் அதிகபட்சமாக அமாட் பட் 54 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக ஜாபர் கோஹர் 22 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் கார்பின் போச் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்டின் டில், யாஸின் வாலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

132 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் கிளைட் ஃபார்ட்டியுன் 1 ரன்னிலும், பின்னர் வந்த ஸ்மித் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான எய்டன் மார்க்ரமுடன் இணைந்தார் ஓல்ட்பீல்ட். இந்த ஜோடி சிறப்பாக ஆடி தென் ஆப்பிரிக்காவை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றது.

அந்த அணி 99 ரன்களை எட்டியபோது ஓல்ட்பீல்ட் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 42.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா. மார்க்ரம் 125 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 66 ரன்களும், பிராட்லே டயல் 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

SCROLL FOR NEXT