விபத்தில் படுகாயம் அடைந்த ஃபார்முலா 2 கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் கோமா நிலையில் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஜெர்மனியின் ஷூமாக்கர், பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் தனது மகனுடன் பனிச் சறுக்கில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த ஷூமாக்கரின் தலையில் படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரது மூளைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். எனவே அவரது நிலைமை அபாயக் கட்டத்தில்தான் உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
44 வயதாகும் ஷூமாக்கர், கார் பந்தயத்தில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். பந்தயத்தில் காரில் அதிவேகமாகச் சென்றபோதும்கூட பெரிய அளவில் ஏதுவும் ஏற்படதாத நிலையில், இப்போது பனிச் சறுக்கு விளையாடியபோது உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.