கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சியாட்டில் நேற்று நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்கா - ஈக்வேடார் அணிகள் மோதின. இதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 21 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் களமிறங்கிய அமெரிக்க அணி ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. கோல்கம்பம் அருகே பந்தை கடத்தி சென்ற பாபி வுட், ஈக்வேடார் வீரர்களின் தடுப்புகளை லாவகமாக ஏமாற்றி பந்தை வலதுபுறத்தில் நின்ற ஜோன்ஸிடம் அனுப்பினார்.
அவர் கொடுத்த கிராஸை பெற்ற கிளின்ட் டெம்ப்சே தலையால் முட்டி கோல் அடித்து அசத்தினார். இந்த தொடரில் டெம்ப்சே அடிக்கும் 3-வது கோல் இதுவாகும். இதன் மூலம் கோல்டன் பூட் விருதுக்கான (தொடரில் அதிக கோல் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் விருது)பட்டியலில் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி, பிரேசிலின் கவுடின்ஹோ ஆகியோருடன் இணைந்துள்ளார் டெம்ப்சே.
டெம்ப்சே அடித்த கோலால் முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என முன்னிலை வகித்தது. முதல் பாதியில் ஈக்வேடார் அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மைக்கேல் அராயோ இலக்கை நோக்கி துல்லியமாக அடித்த பந்தை அமெரிக்க கோல்கீப்பர் பிராட் கஸான் தடுத்து நிறுத்தினார்.
65-வது நிமிடத்தில் ஈக்வேடார் அணியின் தடுப்பு அரண்களை வலுவிழக்க செய்து அமெரிக்கா 2-வது கோலை அடித்ததது. மேட் பெஸ்லர் பந்தை கயாஸி ஸார்டெஸிடம் தூக்கி அடிக்க அவர் தலையால் முட்டி டெம்ப்சேக்கு அனுப்பினார். அவர் பந்தை இலக்கை நோக்கி உதைத்தார்.
பந்து கோல் கம்பத்துக்கு மிக அருகே பயணித்து வெளியே செல்ல முயன்ற நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு அதனை கோலாக மாற்றினர் கயாஸி ஸார்டெஸ்.
74-வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலமாக மாற்றினார் அராயோ. அதன் பின்னர் சில நிமிடங்களில் ஈக்வேடார் அணிக்கு சமன் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
கோல் கம்பத்தின் மிக அருகில் பந்தை பெற்ற என்னர் வெலன்சியா தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து கோல் கம்பத்துக்கு வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது.
கடைசியாக இன்ஜூரி நேரத்தில் அமெரிக்க வீரர் ஜான் புரூக்ஸ் அடித்த பந்து, சில அங்குல இடைவேளையில் சேம் சைடு கோலாக விழுவதில் இருந்து தப்பியது. முடிவில் அமெரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
அர்ஜென்டினா-வெனிசுலா இடையே நடைபெறும் 3-வது காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் அமெரிக்கா அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்த உள்ளது. 1995-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் முதல் முறையாக அமெரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தில் இரண்டாவது பாதியில் இரு அணிகளுமே 10 வீரர்களுடன் விளையாடியது. 52-வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஜோன்ஸூக்கு நடுவர் ரெட்கார்டு வழங்கினார். ஈக்வேடாரின் அன்டோனியா வெலன்சியா 2-வது மஞ்சள் அட்டை பெற்றதால் வெளியேறும் நிலை ஏற்பட்டது. சிவப்பு அட்டை பெற்ற ஜோன்ஸ் அரையிறுதியில் விளையாட முடியாது.
இன்றைய ஆட்டம்
2-வது காலிறுதி
பெரு - கொலம்பியா
நேரம்: அதிகாலை 5.30
ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்