விளையாட்டு

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் லஞ்சம் பெற்ற அமலாக்கத் துறை அதிகாரி கைது

செய்திப்பிரிவு

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சிக்கிய குற்றவாளியிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் முன்னாள் அமலாக்கத் துறை இணை இயக்குநரை சிபிஐ நேற்று கைது செய்தது.

அமலாக்கத் துறையில் இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் ஜே.பி.சிங். இவர் ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சிக்கிய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வந்தார். வழக்கில் இருந்து குற்றவாளிகளை காப்பாற்று வதற்காக அவர்களிடம் இருந்து ஜே.பி.சிங் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை சார்பில் சிபிஐ வசம் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதற்கு முன் பணியாற்றிய இந்திய வருவாய் துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஜே.பி.சிங்கை கைது செய்தனர்.

இவருடன் அமலாக்கத் துறை அதிகாரி சஞ்சய் மற்றும் விமல் அகர்வால், சந்திரேஷ் படேல் ஆகிய இரு தனி நபர்களையும் கைது செய்தனர்.

இது குறித்து சிபிஐ வெளியிட்ட அறிக்கையில், ‘ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அமலாக்க துறை அதிகாரிகளில் சிலர் குற்ற வாளிகளை காப்பாற்றுவதற்காக மிகப் பெரும் தொகையை லஞ்சமாக பெற்றதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.-பிடிஐ

SCROLL FOR NEXT