ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. டி 20 போட்டிகளில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெல்வது இதுவே முதன் முறையாகும்.
ஹராரேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆட்டத்தின் 3-வது ஓவரின் கடைசி பந்தில் ஷிபாபாவை 10 ரன்னில் வெளியேற்றிய பரிந்தர் ஷரண் 5-வது ஓவரில் மேலும் 3 விக்கெட் வீழ்த்தி ஜிம்பாப்வே அணியை நிலைகுலையச் செய்தார்.
இந்த ஓவரில் ஹாமில்டன் மசகட்ஸா 10, ஷிக்கந்தர் ராஸா 1, முட்டோம்போட்ஸி 0 ரன்களில் வெளியேறினர். அப்போது அணியின் ஸ்கோர் 5 ஓவர்களில் 28 ஆக இருந்தது. அடுத்து வந்த வாலர் 14 ரன்னில் யஜூவேந்திரா ஷாகல் பந்தில் ஆட்டமிழந்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய மூர் 31 ரன்னிலும், சிக்கும்புரா 8, மட்ஸிவா 1 ரன்களிலும் பும்ரா பந்தில் வீழ்ந்தனர். கடைசி ஓவரில் கேப்டன் கிரீமர் 4 ரன்னில் குல்கர்னி பந்தில் ஆட்டமிழந்தார்.
பரிந்தர் ஷரண் 4, ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட் கைப்பற்றினர். 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதாக இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 13.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மந்தீப்சிங் 40 பந்தில், 1 சிக்ஸ், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்னும், கே.எல்.ராகுல் 40 பந்தில், 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 47 ரன்னும் எடுத்தனர்.
ஆட்ட நாயகனாக பரிந்தர் ஷரண் தேர்வானார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையை அடைந்துள்ளது. கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.