ஈரோடு கட்டிட தொழிலாளியின் மகனாக பிறந்து, குத்துசண்டை விளையாட்டில் தேசிய அளவில் பதக்கங்களை வென்ற ஈரோடு வாலிபர், தாய்லாந்து நாட்டில் நடக்கும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளார். போட்டிகளில் பங்கேற்க தேவையான நிதி உதவி கிடைத்தால் இவரது, ‘கனவு மெய்ப்படும்’.
ஈரோடு முத்துசாமி காலனியில் வாடகை வீட்டில் வசிக்கும் கட்டிடத் தொழிலாளி செல்லப்பனின் ஒரே மகன் மகேந்திரகுமார் (24).
இவர் வயதுடைய மற்ற இளைஞர்களுக்கெல்லாம் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் கதாநாயகனாக தெரிய, இவருக்கு மைக்டைசன், முகமது அலி போன்ற குத்துச்சண்டை பிரபலங்கள் கதாநாயகனாக தெரிந்திருக்கிறார்கள். டி.வி.,க்களில் வரும் போட்டிகளைப் பார்த்து, வீட்டில் ஒரு மணல் மூட்டையை தயாரித்து, குத்துச்சண்டை வீரராக படிப்படியாக மாறியிருக்கிறார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியியல், யோகா படிப்புக்காக சேர்ந்தபோதுதான், குத்துச்சண்டை மீதான தனது காதலை, பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மாரிமுத்து, தாய் பாக்சிங் சங்கத்தலைவர் மகேஷ்பாபு, ராஜாராம் ஆகியோரிடம் சொல்ல, அவர்களின் உதவியால், முறைப்படியான குத்துச்சண்டை பயிற்சியை, அங்கேயே தங்கி தீவிரமாக மேற்கொள்ளத் துவங்கியிருக்கிறார்.
குத்துச்சண்டையில் அமெச்சூர் எனப்படும் விளையாட்டுக்காக மோதுவது, புரபசனல் எனப்படும் பொழுதுபோக்குப் பந்தயங்களுக்காக நேரடியாக மோதிக்கொள்வது என இரு வகைகள் உள்ளன.
இதில், தாய்லாந்தின் தேசிய விளையாட்டான, ‘தாய் பாக்சிங்’ குத்துச்சண்டை முறையை மகேந்திரகுமார் தேர்வு செய்துள்ளார்.
தமிழ்நாடு அமெச்சூர் மொய்தாய் சங்கம் சார்பில், கடலூரில் 2012ல் நடந்த மாநில அளவிலான குத்துசண்டை போட்டிகளில், 63 கிலோ எடைப்பிரிவில் பெற்ற தங்கப்பதக்கம்தான் இவரது முதல் பதக்கம். 2013ல் மணிப்பூர் மாநிலம், இம்பாலில் நடந்த இரண்டாவது தேசிய புரோ மொய்தாய் பாக்சிங் போட்டிகளிலும், இதே எடைப்பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, தென்கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பங்கேற்க மகேந்திரகுமார் தேர்வு பெற்றுள்ளார். மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து போதிய உதவி கிடைக்காத நிலையில், இந்த போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், மில்கா பிரட் நிறுவனம் போன்றவர்கள் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள உதவியிருக்கிறார்கள்.
மகேந்திரகுமாரின் தீவிர பயிற்சிக்கு பரிசாக, கடந்த 2013ம் ஆண்டு, ஜூன் மாதம் விழுப்புரத்தில் நடந்த, 14வது தேசிய மொய்தாய் குத்துச்சண்டை போட்டியிலும் தங்க பதக்கம் கிடைத்தது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மணிப்பூரில் நடந்த தேசிய புரோ மொய்தாய் பாக்சிங் போட்டிகளில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற இருபது பேரில் இவரும் ஒருவர்.
இந்த போட்டியிலும் தன்னை எதிர்த்தவர்களை, ‘குத்தி தள்ளி’ தங்கம் பெற்ற மகேந்திரகுமார் கே-ஒன் சாம்பியன் பிரிவில் சிறந்த குத்துச் சண்டைவீரர் என்ற பட்டத்தையும் பெற்றார்.
இந்த வெற்றியின் பலனாக மார்ச் மாதம் 12 முதல் 24ம்தேதி வரை தாய்லாந்த் தலைநகர் பாங்காங்கில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 126 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கவுள்ள இந்த போட்டியில், மொய்தாய் (MUAYTHAI) இந்திய கூட்டமைப்பு தலைவர் வொகன் ஜித் சாந்தம் (OKEN JEET SANDAM) தலைமையில், மணிப்பூர், கர்நாடகம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த ஏழு பேர் இந்த போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
இதில் தமிழகத்தில் இருந்து தேர்வு பெற்ற மகேந்திரகுமாரும் அடக்கம்.இந்த போட்டிகளில் பங்கேற்க மத்திய, மாநில அரசுகளின் உதவி கிடைக்காத நிலையில், தனியாரின் நிதி உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இது குறித்து மகேந்திரகுமார் கூறுகை யில்,"ஒலிம்பிக் கவுன்சில் ஆப் ஏசியா, இந்திய ஒலிம்பிக் கவுன்சில் ஆகியவை இந்த விளையாட்டை அங்கீகரித்துள்ளது.
தமிழகத்தில் இந்த விளையாட்டு குறித்த விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. போதிய பயிற்சி அளிக்கவோ, ஸ்பான்சர் வழங்கவோ ஆட்கள் இல்லை.
பாங்காங்கில் நடக்கும் போட்டியில் பங்கேற்க சென்று வரும் செலவு, பயிற்சி, உணவு, உபகரணங்கள் என மூன்று லட்ச ரூபாய் வரை செலவாகும். இந்த உதவி கிடைக்குமானால், உலக சாம்பியன் போட்டியில் பதக்கம் பெற்று திரும்புவேன்” என்றார்.
குத்துச்சண்டையில் பெற்ற பதக்கங்களின் சிறப்பை அறிந்திராத மகேந்திரகுமாரின் தந்தை செல்லப்பன், “சண்டைக்கு போய் என்னத்த ஆவப்போகுது. காயமாயிடுச்சுன்னா யாரும் பொண்ணு கொடுக்க மாட்டாங்க. ஏதாச்சும் காலேஜில போய் வேலை பார்த்தான்னா குடும்பத்துகாவது உதவியா இருக்கும்” என்று வெள்ளேந்தியாய் கூறுகிறார்.
இளைஞர்களிடம் விளையாட்டு திறனை வளர்க்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
அத்தகைய தமிழக அரசின் பார்வையில் தனது கோரிக்கை படாதா என்று ஏக்கத்துடன் காத்திருக்கும் மகேந்திரகுமாருக்கு உதவ விரும்பு பவர்கள் mahendaran58@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலோ, 9600555334 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.