இந்திய தடகள முன்னாள் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், கேரள விளையாட்டு கவுன்சில் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயராஜன், தன்னை ஊழல் குற்றச்சாட்டுகளால் அவமானப்படுத்தி விட்டதாக கடந்த 9-ம் தேதி அஞ்சு பாபி ஜார்ஜ் பரபரப்பு குற்றம் சாட்டினார். கேரளாவில் விளையாட்டு துறையின் நிலை என்னவாக இருக்கிறது என்று அவர் எங்களிடம் கேட்பார் என்று நினைத்தோம்.
ஆனால் முதல் சந்திப்பிலே நீங்கள் அனைவரும் முந்தைய அரசினால் நியமிக்கப்பட்டவர் கள்தானே. எனவே நீங்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்கள். உங்களு டைய நியமனம் மற்றும் இடமாற்றம் அனைத்துமே சட்டவிரோதமாக நடைபெற்றுள்ளதாக அமைச்சர் குற்றம் சுமத்தியதாகவும் அஞ்சு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அஞ்சு முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் அஞ்சு உள்ளிட்ட 12 நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இது குறித்து அஞ்சு பாபி ஜார்ஜ் கூறும்போது, “நீங்கள் எங்களை கொல்லலாம். ஆனால் எங்களை வீழ்த்த முடியாது. விளையாட்டு என்பது கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டது. கவுன்சிலின் கடந்த 6 மாத செயல்பாடுகள் குறித்து மட்டும் விசாரணை நடத்தாமல் அதற்கு முந்தைய காலக்கட்டம் தொடர்பாகவும் முழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதில் எனது சகோதரர் நியமனமும் அடங்கும் என்றார்.’’