விளையாட்டு

திருநெல்வேலியிலும் டிஎன்பிஎல் ஆட்டங்கள் தொடங்கின

செய்திப்பிரிவு

டிஎன்பிஎல் தொடரின் 8-வது ஆட்டத்தில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணி 19.5 ஓவர்களில் 95 ரன்ககளுக்கு சுருண்டது. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 43 ரன்கள் எடுத்தார். கோவை அணி தரப்பில் சிவகுமார் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

17-வது ஓவரின் இரண்டாவது பந்தில் மாருதி ராகவின் விக் கெட்டை கைப்பற்றிய சிவகுமார் அடுத்த பந்தில் வாஷிங்டன் சுந்தரை அவுட் ஆக்கினார். அடுத்து களம் இறங்கிய ஆகாஷ் சும்ராவை கிளீன் போல்டாக்கிய சிவகுமார் இத்தொடரின் முதல் ஹாட்ரிக் விக்கெட் சாதனையை நிகழ்த்தினார்.

கோவைக்கு முதல் வெற்றி

எளிதான இலக்குடன் களம் இறங்கிய கோவை அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது. அனிருத் சீதாராம் 48, சூர்யபிரகாஷ் 43 ரன்கள் எடுத்தனர். சிவகுமார் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடரின் 9-வது நாளான நேற்று திருநெல்வேலி மாவட் டத்தில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான மைதானத்தில் போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருவள்ளூர் வீரன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தையொட்டி நடிகை இனியா பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு நடன கலைஞர்களுடன் இணைந்து இனியா நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார். இதையடுத்து போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக சுப்பிரமணிய சிவா அணியை வழிநடத்தினார். முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஜெகதீசன் 69 பந்துகளில், 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 87 ரன்களும், கங்கா தர் ராஜூ 45 ரன்களும் எடுத்தனர். திருவள்ளூர் அணி தரப்பில் ஜெகநாத் சீனிவாஸ் ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து 164 ரன்கள் இலக்குடன் திருவள்ளூர் அணி பேட் செய்ய தொடங்கியது.

மீளுமா மதுரை

தொடரின் 10-வது நாளான இன்று லைகா கோவை கிங்ஸ் - மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. திருநெல் வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

SCROLL FOR NEXT