விளையாட்டு

புஜாரா தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வாரா? - 3-வது டெஸ்டில் தேர்வு நெருக்கடி

இரா.முத்துக்குமார்

செயிண்ட் லூசியாவில் இன்று 3-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. முரளி விஜய் அணிக்கு திரும்பும் நிலையிலும் ராகுல் 158 ரன்களை கடந்த டெஸ்ட் போட்டியில் எடுத்ததும், புஜாராவின் தேர்வின் மீது கேள்விக்குறியை உருவாக்கியுள்ளது.

மேலும் மீதமுள்ள இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் செல்ல வாய்ப்புள்ளதால், விரைவு கதியில் ரன்குவிப்பதால் மட்டுமே பவுலர்களுக்கு 20 விக்கெட்டுகளை வீழ்த்த போதிய அவகாசம் கிடைக்கும் என்று அனில் கும்ப்ளேவும் விராட் கோலியும் கருதுவதாகத் தெரிகிறது, புஜாரா ஆக மந்தமாக ஆடி வருகிறார், மேலும் ரன் விகிதம் இவரது பேட்டிங்கினால் குறைவதோடு, அதனை மேம்படுத்தாமலேயே அவுட் ஆகியும் வெளியேறி வருகிறார்.

கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக மேட்ச் வின்னிங் சதத்திற்குப் பிறகு புஜாரா 8 இன்னிங்ஸ்களில் வைத்துள்ள சராசரி 33 ஆகும். ஒரேயொரு அரைசதம்தான் எடுத்துள்ளார். அவரது ஒட்டுமொத்த ஸ்ட்ரைக் ரேட் 48 என்பதே குறைவுதான் ஆனால் கடந்த 8 இன்னிங்ஸ்களில் இது 41ஆக குறைந்துள்ளது.

5 பவுலர்கள் அவசியம் என்று உணரும் கேப்டன் விராட் கோலியின் படையில் தற்போது 5 பேட்ஸ்மென்கள் விரைவு ரன் குவிப்பில் ஈடுபட்டேயாக வேண்டும். இந்நிலையில் புஜாரா ஏகப்பட்ட பந்துகளை விழுங்கிய பின்பு அடிக்க வேண்டிய கட்டத்தில் அவுட் ஆகி வெளியேறி வருகிறார். குறிப்பாக அதிகம் பவுல்டு ஆகிறார் இல்லையேல் எல்.பி.

காரணம் அவரது உத்தி ஸ்டம்புகளுக்கு நேராக முன்னங்கால் வருவதே, மட்டையை கீழே கொண்டு வருவதிலும் அவரிடம் சுறுசுறுப்பு இல்லை. பலவேளைகளில் முன்னாலும் வருவதில்லை பின்னாலும் செல்வதில்லை. இதனால் மட்டையை தொங்க விட நேரிடுகிறது. அவர் சில ஷாட்களை ஆடினால் இழந்த ஃபுட்வொர்க்கை மீண்டும் அடையலாம், கிரீசில் அதிக நேரம் செலவிடுவது என்பதை அவர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார், கிரீசில் அதிக நேரம் என்றால் ரன்கள் வந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம். அவர் அதீதமாக வினையாற்றி தனக்குத்தானே உத்திகளில் சிக்கலை வகுத்துக் கொள்கிறார் என்றே தெரிகிறது. ஒரு சேவாக் மன நிலையில் அவர் களமிறங்கி 2-3 ஓவர்கள் அதிரடி ஆட்டம் காண்பித்தாரென்றால் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறலாம்.

மே.இ.தீவுகளின் ஜெர்மைன் பிளாக்வுட் அப்படித்தான் ஆடுகிறார். அவர் பெரிய அதிரடி வீரர் அல்ல, ஆனாலும் இப்படி ஆடும்போதுதான் தனது நம்பிக்கை வளர்கிறது என்று அவர் கூறுகிறார். இதனை உதாரணமாக புஜாரா கொள்வது நலம்.

மேலும் அவரது வெளிநாட்டு சராசரியும் உள்நாட்டு சராசரியை ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. 17 டெஸ்ட் போட்டிகளில் வெளியே இவர் 1001 ரன்களையே எடுத்துள்ளார், சராசரி 33 ரன்களே. இதே 17 டெஸ்ட் போட்டிகளில் உள்நாட்டில் 1481 ரன்களை எடுத்துள்ளார்.

கே.எல்.ராகுல் வேகமாக ரன்களைக் குவிப்பதோடு மிகப்பெரிய சதத்தையும் எடுக்கிறார், எனவே புஜாராவுக்கு அணியில் நீடிப்பது கடினமாகி வருகிறது.

இந்நிலையில் இன்று செயிண்ட் லூசியாவில் 3-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. புஜாராவையும் வைத்துக் கொண்டு ராகுலையும் வைத்துக் கொண்டால் ராகுல் விக்கெட் கீப்பிங்கும் சேர்த்து செய்ய வேண்டிவரும் அப்போது விருத்திமான் சஹாவுக்கு வாய்ப்பில்லாமல் போகும். ஆகவே அணி நிர்வாகம் என்ன முடிவெடுக்கும் என்பது ஆர்வமூட்டுவதாக உள்ளது.

SCROLL FOR NEXT