விளையாட்டு

தோனி பற்றி கருத்து: ஊடகங்களைச் சாடிய ஹர்பஜன் விளக்கம்

இரா.முத்துக்குமார்

சாம்பியன்ஸ் டிராபி அணித்தேர்வில் தன் பெயர் பரிசீலிக்கப்படாதது குறித்து தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தான் கூறிய கருத்தை ஊடகங்கள் திரித்து வெளியிட்டதாக ஹர்பஜன் சிங் சாடியுள்ளார்.

அதாவது, தோனி சமீபமாக பந்துகளை சரிவர அடிக்க முடியவில்லை என்பதைப் பார்க்கிறோம். ஆனால் அவரது அனுபவம் மற்றும் இளம் வீரர்களிடத்தில் அவர் செலுத்தும் தாக்கம் அவரது தேர்வுக்குக் காரணம் என்றால் நாங்களும்தான் அதே தாக்கத்தை ஏற்படுத்த முடியும், எனவே அணித்தேர்வில் மூத்த வீரர்களை தேர்வு செய்வதில் தோனிக்கும் மற்றவர்களுக்குமிடையே பாரபட்சம் காட்டப்படுகிறது என்று பேசினார்.

பேட்டி எடுத்தவர் கேட்ட போது தோனியின் தேர்வுக்கான தேர்வுக்குழுவின் காரணங்களைக் கூறி நீங்களும் (ஹர்பஜனும்) அவரைப்போன்று அனுபவம், உள்ளிட்டு நிறைய பங்களிப்பு செய்துள்ளீர்களே என்று கேட்டார், இதற்கு ஹர்பஜன், தோனிக்கு அளிக்கப்படும் முன்னுரிமை எங்களுக்கு அளிக்கபடவில்லை தேர்வுக்குழுவைத்தான் கேட்க வேண்டும் என்று கூறி உங்கள் கேள்வி சரியான கேள்விதான் என்றார்.

இந்நிலையில் அவர் தொடர் ட்வீட்களில் அளித்த விளக்கம் இதோ:

ஊடகங்களே எப்போதும் நான் கூறியதை தவறாக வெளியிடாதீர்கள். மொத்த வீடியோவையும் பார்த்தால் நான் என்ன கூறினேன் என்பது புரியவரும்.

தோனி என்னுடைய நெருங்கிய நண்பர், பெரிய வீரர். நான் அவரது தேர்வுக் குறித்து ஐயம் எதுவும் எழுப்பவில்லை. எனவே நான் அவருக்கு எதிராக கூறாததை கூறியது போல் காட்டாதீர்கள்.

உங்கள் ஊடகங்களை நடத்துவதற்காக பரபரப்பாக செய்திகளை வெளியிட்டு மற்றவர்கள் கூறியதை அவர்கள் கூறிய அந்த இடத்திலிருந்து பெயர்த்து தவறாகக் குறிப்பிட்டு ஒருவரது பிம்பத்தை சேதப்படுத்தாதீர்கள்.

இவ்வாறு ஹர்பஜன் விளக்கம் அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT