மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் முதல் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய மகளிர் அணி இங்கிலாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 புள்ளிகளைப் பெற்றது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியுடன் இந்தியா மோதியது. கவுன்டி கிரிக்கெட் மைதானமான டெர்பியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளான பூனம் ராவத், ஸ்மிருதி மந்தனா ஜோடி அபாரமாக விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 27 ஓவர்களில் 144 ரன்கள் சேர்த்தது. பூனம் ராவத் நிதானம் காட்ட ஸ்மிருதி பந்தனா அதிரடியாக ஆடினார்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க் கப்பட்ட நிலையில் மந்தனா 72 பந்து களில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரி களுடன் 90 ரன்கள் எடுத்த நிலையில் நைட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜூம் நேர்த்தியாக விளையாடினார்.
நிதானமாக பேட் செய்த பூனம் ராவத் 134 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்த நிலையில் ஹசல் பந்திலும், மிதாலி ராஜ் 73 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்த நிலையில் நைட் பந்திலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் நைட் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
282 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி பாண்டேயின் அபாரப் பந்து வீச்சில் பியுமாண்ட், டெய்லர், சிவர் ஆகியோரை இழந்து 67/3 என்று தடுமாறியது, நைட், வில்சன் இணைந்து ஸ்கோரை 134 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சு படு டைட்டாக அமைந்ததால் ரன் விகிதம் மந்தமாகவே காணப்பட்டது. நைட் 46 ரன்களில் கவுரிடம் ரன் அவுட் ஆனார். வியாட், பிரண்ட் ஆகியோரும் விரைவில் வெளியேற இங்கிலாந்தின் ஒரே நம்பிக்கையாக வீராங்கனை வில்சன் மட்டும் நின்று கொண்டிருந்தார், ஆனால் அவரும் 75 பந்துகளில் 81 ரன்கள் எடுத்த நிலையில் அருமையான பீல்டிங்கில் ரன் அவுட் ஆக இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு முடிவுக்கு வந்தது. கடைசியில் 47.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டு தோல்வி தழுவியது.
ஆட்ட நாயகியாக மந்தனா தேர்வு செய்யப்பட்டார்.