விளையாட்டு

தோனிக்கும் எங்களுக்கும் இடையே பாகுபாடு காட்டுவது ஏன்? - ஹர்பஜன் சிங் காட்டம்

இரா.முத்துக்குமார்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அணியில் தன்னையும் கம்பீரையும் தேர்வு செய்யாதது குறித்து ஹர்பஜன் சிங் விரக்தியாகப் பேசியுள்ளார்.

தோனிக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமை தனக்கும், கம்பீருக்கும் கொடுக்கப்படுவதில்லையே? இது ஏன் என்று ஹர்பஜன் சிங் கேட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி பேட்டியில் ஹர்பஜன் சிங் கூறியிருப்பதாவது:

“உண்மையில் நாங்கள் பார்த்த வரையில் தோனியினால் முன்னைப்போல் பந்துகளை அடித்து ஆட முடியவில்லை. ஆனால் அவர் கேப்டனாக இருந்துள்ளார், ஆட்டத்தை புரிந்து கொள்கிறார் நடுவரிசையில் அவர் இருப்பது இளம் வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும், எனவே அவருக்கு இத்தகையதோர் முன்னுரிமை இருக்கிறது.

ஆனால் என்னை எடுத்துக் கொண்டால் அத்தகைய முன்னுரிமைகள் இல்லை, ஆம் எங்களுக்கு இந்த முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை.

நாங்களும் 19 ஆண்டுகள் இந்தியாவுக்காக ஆடியுள்ளோம், வென்றிருக்கிறோம், தோற்றிருக்கிறோம், நானும் 2 உலகக்கோப்பை வெற்றி அணிகளில் இருந்துள்ளேன்.

ஆகவே சில வீரர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமைகள், சிறப்புரிமைகள் எங்களுக்குக் கிடைப்பதில்லை. ஏன் இந்தப் பாரபட்சம் என்பதே என் கேள்வி. மூத்த வீரர்கள் அனைவருக்கும் ஒரே அளவுகோல் கடைபிடிக்கப்படுகிறதா?

ஏன்? என்ற கேள்வி தேர்வுக்குழுவினரை நோக்கி எழுப்பப் படவேண்டும். நான் என்னையே புகழ்பாடிக் கொண்டிருக்க விரும்பவில்லை, ஆனால் நானும் மற்றவர்கள் என்ன அணிக்குச் செய்தனரோ அந்த அளவுக்கு திறமையை வெளிப்படுத்தியுள்ளேன். எங்களுக்கும் நாட்டுக்கு ஆட வேண்டும் என்ற ஆசை உண்டு.

கம்பீர் குறித்து....

கம்பீர் பெயரும் என் பெயரும் பரிசீலிக்கப்படவில்லை என்று அறிகிறோம். இது நியாயமாகாது. நாங்கள் எதற்கு ஐபிஎல் போன்ற தொடர்களில் ஆடுகிறோம். இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான். கவுதம் கம்பீரைப் பொறுத்தவரை நிறைய ரன்களை இந்தத் தொடரில் குவித்துள்ளார்.

என் நிலை நன்றாகத் தெரியும்; அஸ்வின் உடற்தகுதி பெற்றால் அவர்தான் இடம்பெறுவார், அவர் உடற்தகுதி பெறவில்லையெனில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும். ஐபிஎல் கிரிக்கெட்டில் அஸ்வின் ஆடவில்லை, காரணம், சாம்பியன்ஸ் டிராபிக்கு அவர் முழு உடற்தகுதி பெற வேண்டும் என்பதே, இது எனக்கு புரிகிறது. அஸ்வின் விதிவிலக்கான வீரர் என்பதைப் புரிந்து கொள்கிறேன். சாம்பியன்ஸ் டிராபியில் அவர் சிறப்பாக வீச வாழ்த்துகிறேன். ஆனால் நன்றாக ஆடும் போது என்னையும் பரிசீலிக்கலாமே? இரண்டு வீரர்களுக்கு ஏன் இருவேறு அளவுகோல்கள் என்பதே என் கேள்வி.

இவ்வாறு கூறியுள்ளார் ஹர்பஜன்சிங்.

அதாவது தோனியை தேர்வு செய்ததற்கு தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறிய காரணங்கள்தான் ஹர்பஜன் சிங்கின் இலக்கு என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT