ஜிம்பாப்வே அணியிடம் ஆஸ்திரேலியா 31 ஆண்டுகள் கழித்து தோல்வி கண்டது. அதாவது 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகளின் போது ஆஸ்திரேலியா ஜிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்ட பிறகு நேற்று மீண்டும் தோல்வி கண்டது.
இந்தத் தோல்விகளை அடுத்து கேப்டன் மைக்கேல் கிளார்க் மற்றும் ஆஸ்திரேலிய அணியினர் மீது ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
இந்த நிலையில் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் தோற்றதற்கு முதல் நாள் இரவு கடுமையாக, கேன் கேனாக குடித்ததே காரணம் என்று அந்த அணியில் இடம்பெற்றிருந்த ராட்னி ஹாக் தனது டிவிட்டரில் தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இது குறித்து ராட்னி ஹாக் டிவிட்டரில் கூறிய வாசகம் இதோ: "At least when Zimbabwe beat us in '83 we were drinking cans the night before. And lots of them" - என்று பதிவிட்டிருந்தார்.
இந்த டிவிட்டருக்குப் பிறகு ’நாட்டிற்காக ஆடும்போது உங்களது கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது’ என்ற தொனியில் நிறைய அந்த ஆஸ்திரேலிய அணியின் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
1983ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணியை டிரெண்ட் பிரிட்ஜ்ஜில் எதிர்கொண்டபோது, ஆஸ்திரேலிய கேப்டன் கிம் ஹியூஸ் டாஸ் வென்று முதலில் ஜிம்பாப்வேயை பேட் செய்ய அழைத்தார். அந்த அணி 94/5 என்ற நிலையிலிருந்து கடைசியில் களமிறங்கிய பிளெட்சர் (யார்? இப்போதைய இந்தியப் பயிற்சியாளர் சாட்சாத் டன்கன் பிளெட்சர்தான்) 84 பந்துகளில் 69 ரன்களை எடுக்க, கெவின் கரன் என்ற ஆல்ரவுண்டர் 27 ரன்களை விளாச, ஐ,.பி. புட்சர்ட் என்ற மற்றொரு வீரர் 34 ரன்களை எடுத்தார். 31 ரன்களை உதிரிகள் வகையில் ஆஸ்திரேலியா கொடுக்க ஜிம்பாப்வே 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 60 ஓவர்களில் 239 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய பந்து வீச்சு சாதாரணமானதல்ல, ஜெஃப் லாசன், ராட்னி ஹாக், டெனிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன் போன்ற ஜாம்பவான்கள் இருந்த அணி.
பேட்டிங்கிலும் உட், வெசல்ஸ், ஹியூஸ், பார்டர், டேவிட் ஹுக்ஸ், கிரகாம் யாலப், ராட்னி மார்ஷ் என்று பலம் அதிகம்.
ஆனால் ஆஸ்திரேலியா 60 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்களை மட்டுமே எடுத்து அதிர்ச்சித் தோல்வி கண்டது. சரி பந்து வீச்சில் அசத்தியாது யார் தெரியுமா? அதே டன்கன் பிளெட்சர்தான், இவர் உட், ஹுக்ஸ், ஹியூஸ், யாலப் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி 4/42 என்று அசத்தினார்.
அதிர்ச்சி நம்பர் 1: இந்த ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ‘நம்’ டன்கன் பிளெட்சர்தான். இவர்தான் இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் என்பது வேறு விஷயம்
அனைத்தையும் விட அதிர்ச்சி: ஜிம்பாப்வே அணி வீர்ர்களில் பாதிக்கும் மேல் கேப்டன் டன்கன் பிளெட்சர் உட்பட தங்கள் அறிமுக ஒருநாள் போட்டியில் ஆடுபவர்கள்.
டன்கன் பிளெட்சர் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார் அதுவே அவரது சர்வதேச அனுபவம்.
மேலும் அவர் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியும் அதே உலகக்கோப்பையில்தான், ஜூன் 20, 1983-இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆடியதுதான் நமது டன்கன் பிளெட்சரின் கடைசி போட்டி. இந்தப் போட்டியில் பிளெட்சர் 23 ரன்கள் எடுத்து விவ் ரிச்சர்ட்ஸ் பந்தில் பவுல்டு ஆனார்.
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 172/0 என்று வெற்றி பெற்றது.