18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி 2018-ல் இந்தோனேசியாவில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (ஓசிஏ) அறிவித்துள்ளது.
முன்னதாக இந்தப் போட்டியை வியட்நாம் நடத்துவதாக இருந்தது. ஆனால் அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து போட்டியை நடத்த முடியாது என அந்நாடு அறிவித்தது. அதைத்தொடர்ந்து 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தோனேசியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஓசிஏ தலைவர் ஷேக் அஹமது அல்-பஹாட் அல்-சபா கூறுகையில், “அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறுகிறது. அதற்கு ஓசிஏவின் செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது” என்றார்.
இந்தோனேசிய ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகி அடீ லியூக்மேன் கூறுகையில், “ஆசிய விளையாட்டுப் போட்டி நடத்தும் வாய்ப்பு இந்தோனேசிய மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும். அதனால் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்” என்றார்.
இதற்கு முன்னர் 1962-ல் ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தியுள்ளது இந்தோனேசியா. அந்தப் போட்டியும் ஜகார்த்தாவில்தான் நடைபெற்றுள்ளது.