தொழில்பூர்வ துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) தனது கடைசி நாள் என்று இந்தியாவின் ஒலிம்பிக் தங்கமகன் அபினவ் பிந்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் முதன்மை நட்சத்திரமாகத் திகழும் அபினவ் பிந்த்ராவின் இந்த திடீர் அறிவிப்பு, விளையாட்டு உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்சியானில் நடைபெறும் 17வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாளை 10மீ ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், அவர் தனது டிவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: "நாளை எனது தொழில்பூர்வ துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டின் கடைசி நாள். இருப்பினும் பொழுதுபோக்குக்காக துப்பாக்கி சுடுதல் வீரராக தொடர்வேன்.
ஆனாலும், 2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் விளையாட முயற்சி செய்வேன், இப்போதே எனது விளையாட்டு பயோ-டேட்டா முழுநிறைவாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
2010-ஆம் ஆண்டு ஆசியப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர் நாளை இன்சியானில் கையான்கிடோ ஷூட்டிங் ரேஞ்சில் கடைசி முறையாக தொழில்பூர்வ துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் பங்கேற்கிறார்.
2008-ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தவர் அபினவ் பிந்த்ரா என்பது குறிப்பிடத்தக்கது.