முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்தத் தொடரில் தனது முதல் போட்டியில் களமிறங்கிய கிறிஸ் கெயில், மேக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரில், 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் அதிரடியாக 20 ரன்கள் குவித்தார். ஆனால் சந்தீப் சர்மாவின் அடுத்த ஓவரில் கிறிஸ் கெயில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
தொடர்ந்து வந்த விராட் கோலி, தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்திலேயே வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே டாகாவாலே ஆட்டமிழக்க, பெங்களூரு அணி ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.
பிறகு ஜோடி சேர்ந்த யுவராஜ் சிங், டி வில்லியர்ஸ் ஜோடி சிறிது நம்பிக்கை அளித்தது. இந்த ஜோடியும் வெகு நேரம் நீடிக்கவில்லை. டி வில்லியர்ஸ் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் களமிறங்கிய மார்கெல் 15 ரன்களுக்கும், யுவராஜ் சிங் 35 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 100 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஆரோன் மற்றும் ஸ்டார்க் ஜோடி 19-வது ஓவர் முடியும் வரை தாக்குப் பிடித்து, அணியின் ஸ்கோரை 120 ரன்களுக்கு எடுத்துச் சென்றது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களை மட்டுமே பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக யுவராஜ் 35 ரன்களை எடுத்திருந்தார்.